‘குடித்து விட்டு தகராறு செய்ததால் தந்தையை அடித்துக் கொன்றேன்’ கைதான வாலிபர் வாக்குமூலம்
கிள்ளை அருகே தொழிலாளியை கொலை செய்த வழக்கில் மகனை போலீசார் கைது செய்தனர். குடித்து விட்டு தகராறு செய்ததால் அடித்துக் கொன்றதாக போலீசில் அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
பரங்கிப்பேட்டை,
கிள்ளை அருகே உள்ள பொன்னந்திட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 63). தொழிலாளி. இவருக்கும், இவருடைய மகன் சக்திவேல்(35) என்பவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அப்போது ராமலிங்கம் செங்கல்லால் சக்திவேலை தாக்கினார். இதில் ஆத்திரமடைந்த சக்திவேல், வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் ராமலிங்கத்தின் தலையில் அடித்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
தந்தை இறந்தது பற்றி அறிந்ததும் சக்திவேல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்த தகவலின் பேரில் கிள்ளை போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி, சப்–இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, ராமலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் கிள்ளை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சக்திவேலை தேடி வந்தனர்.
இந்த நிலையில் சக்திவேல், பொன்னந்திட்டு வெள்ளாற்றங்கரையோரம் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் வெள்ளாற்றங்கரைக்கு விரைந்து சென்று, அங்கு பதுங்கி இருந்த சக்திவேலை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அப்போது அவர் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:–
எனது தந்தை ராமலிங்கம் தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வந்த தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதனால் நான் அவரிடம் ஏன் தினசரி குடித்து விட்டு வருகிறீர்கள் என தட்டிக் கேட்டேன். இதனால் எங்கள் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில் எனது தந்தை கீழே கிடந்த செங்கல்லை எடுத்து என்னை தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த நான் வீட்டில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து எனது தந்தையின் தலையில் அடித்துக் கொலை செய்தேன் என்றார்.