ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: பசுமை தீர்ப்பாயம் உத்தரவு குறித்து அரசிடம் ஆலோசித்து நடவடிக்கை
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயம் உத்தரவு குறித்து அரசிடம் ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.
தூத்துக்குடி,
இதுகுறித்து அவர் நேற்று காலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவின் பேரில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து பொருட்கள் வெளியேற்றும் பணி முற்றிலும் நிறுத்தப்பட்டு உள்ளது. அனைத்து வாசல்களும் முழுமையாக சீல் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் தீர்ப்பாயம் உத்தரவின் பேரில், நிர்வாக பணிகளை மேற்கொள்வதற்காக ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவில்லை. அவர்கள் தொடர்பு கொண்டால், அரசிடம் ஆலோசித்து கோர்ட்டு உத்தரவுப்படி மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக கடற்கரையை சுத்தம் செய்யும் பணி நடந்து உள்ளது. கடற்கரைக்கு அதிகளவில் மக்கள் வருவார்கள். அவர்கள் கடற்கரையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பகுதியில் விழிப்புணர்வு பலகைகள் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதேபோன்று ரோச் பூங்கா, முத்துநகர் கடற்கரை ஆகியவற்றிலும் மக்களையும், மாணவர்களையும் ஈடுபடுத்தி சுத்தம் செய்யும் பணி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும்.
மாவட்டத்தில் நீர்விளையாட்டுகளுக்கு எந்தவித பெரிய அளவிலான திட்டங்களும் இதுவரை செயல்படுத்தப்படவில்லை. இதனால் தூத்துக்குடி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள கடல் பகுதியில் படகு குழாம் மற்றும் பல்வேறு பொழுதுபோக்கு விளையாட்டுகள் செயல்படுத்த திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இன்னும் 15 நாட்களுக்குள் இந்த பணி முடிவடையும். இதன்மூலம் மாநகராட்சி மக்களுக்கு ஒரு அருமையான விளையாட்டு பொழுதுபோக்கு இடம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story