பெரம்பலூரில் ரெயில் போக்குவரத்து சர்வே நடத்த மத்திய அரசு ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கீடு


பெரம்பலூரில் ரெயில் போக்குவரத்து சர்வே நடத்த மத்திய அரசு ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 13 Aug 2018 4:15 AM IST (Updated: 13 Aug 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் ரெயில் போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யும் வகையில், முதற்கட்டமாக சர்வே நடத்த மத்திய அரசு ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

பெரம்பலூர்,

தமிழகத்தில் ரெயில் போக்குவரத்து வசதி இல்லாத ஒரே மாவட்டம் பெரம்பலூர். ஆனால் மாநிலத்தின் மைய பகுதியில் அமைந்துள்ளதால் பெரம்பலூரில் இருந்து தமிழகத்திற்கு எந்த பகுதிக்கும் எளிதாக சென்று வரும் வகையில், பஸ் போக்குவரத்து வசதி உள்ளது. பெரம்பலூர் மாவட்ட மக்கள், ரெயில் போக்குவரத்துக்காக அரியலூர் அல்லது திருச்சிக்கு தான் செல்ல வேண்டும்.

இந்த நிலையில் பெரம்பலூர் வழியாக ரெயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டுமென இப்பகுதி மக்கள் மருதராஜா எம்.பி.யிடம் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து மருதராஜா எம்.பி., அரியலூரில் இருந்து பெரம்பலூர், துறையூர், தா.பேட்டை வழியாக நாமக்கல் வரை ரெயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் வலியுறுத்தி பேசினார். இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த மத்திய அரசு, அரியலூரில் இருந்து பெரம்பலூர், துறையூர், தா.பேட்டை வழியாக நாமக்கல்லை இணைக்கும் வகையில் 108 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தும் வகையில், முதற்கட்டமாக சர்வே நடத்த உத்தரவிட்டுள்ளது. மேலும் இதற்காக ரூ.16 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கீடும் செய்துள்ளது. இதற்கான உத்தரவு கடித நகலை சில நாட்களுக்கு முன்பு மத்திய ரெயில்வே போக்குவரத்து துறை இயக்குனர் தன்னன்ஜெயசிங், மருதராஜா எம்.பி.யிடம் வழங்கியுள்ளார்.

இதுகுறித்து மருதராஜா எம்.பி. கூறுகையில், “பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்டநாள் கனவு திட்டமான ரெயில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தரவேண்டுமென நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினேன். அதைத்தொடர்ந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திரமோடி, ரெயில்வே மந்திரி பியூஸ்கோயல், இணை மந்திரி ராஜன்கொகைன் ஆகியோரை நேரில் சந்தித்து, பெரம்பலூர் வழியாக ரெயில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்திதரவேண்டும் என கோரிக்கை விடுத்தேன். இதையடுத்து, சர்வே நடத்த மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது, என்றார். 

Next Story