கங்கைகொண்ட சோழபுரம், வி.கைகாட்டி துர்க்கை, கருமாரியம்மன் கோவில்களுக்கு பக்தர்கள் பால்குட ஊர்வலம்


கங்கைகொண்ட சோழபுரம், வி.கைகாட்டி துர்க்கை, கருமாரியம்மன் கோவில்களுக்கு பக்தர்கள் பால்குட ஊர்வலம்
x
தினத்தந்தி 12 Aug 2018 10:30 PM GMT (Updated: 12 Aug 2018 7:22 PM GMT)

கங்கை கொண்ட சோழபுரம், வி.கைகாட்டி துர்க்கை, கருமாரி யம்மன் கோவில்களுக்கு பக்தர்கள் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் பக்தர்கள் அலகுகுத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்துள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் உள்ள துர்க்கை அம்மனுக்கு ஆடி மாத சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி அருகில் உள்ள நாச்சியார் குளத்தில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து கொண்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் துர்க்கை அம்மனுக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் எடுத்து வந்த பால்குடம் மூலம் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து மாலை துர்க்கை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு துர்க்கை அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வி.கைகாட்டி ஜெயங்கொண்டம் மெயின் ரோட்டில் உள்ள உப்பு ஓடை அருகே தென்திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் பக்தர்கள் பால்குடம் எடுப்பது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டுக்கான ஆடிமாத திருவிழா நேற்று நடைபெற்றது. திரு விழாவை முன்னிட்டு தேளூர் பாப்பாத்தியம்மன் கோவிலில் இருந்து விரதம் இருந்த பக்தர்கள் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், பால்குடம் எடுத்தும் மேள, தாளம் முழங்க ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. இதில் விளாங்குடி, தேளூர், காத்தான்குடிக்காடு, குடிசல், ஓரத்தூர், ரெட்டிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊர்முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

பெரம்பலூர் தாலுகா செங்குணம் கிராமத்தில் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் இரவும் மயில், சிம்ம, அன்ன உள்ளிட்ட பல்வேறு வாகனத்தில் அம்மன் வீதி உலா வந்தார். அம்மனுக்கு விரதமிருந்த பக்தர்கள் நேற்று காலை பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் கோவிலுக்கு வந்தனர். இதையடுத்து தீ மிதித்தல் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு வெட்டுக்குதிரையில் அம்மன் புறப்பாடு வாணவேடிக்கையுடன் நடந்தது. மேலும் கலைநிகழ்ச்சிகளும் நடந்தது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) அம்மன் மஞ்சள் நீராடுதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் மற்றும் செங்குணம் கிராம மக்கள் செய்துள்ளனர். 

Next Story