கழிப்பறையை பயன்படுத்துவது குறித்து மாணவர்கள் உறுதி மொழி எடுக்க வேண்டும்


கழிப்பறையை பயன்படுத்துவது குறித்து மாணவர்கள் உறுதி மொழி எடுக்க வேண்டும்
x
தினத்தந்தி 12 Aug 2018 10:15 PM GMT (Updated: 12 Aug 2018 7:37 PM GMT)

கழிப்பறையை பயன் படுத்துவது குறித்து மாணவர்கள் உறுதி மொழி எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் முதன்மைக்கல்வி அதிகாரி வனஜா கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி வனஜா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

ஒவ்வொரு பள்ளியிலும் பதிலி ஆசிரியர் பதிவேடு பராமரிக்க வேண்டும். ஆசிரியர் இல்லாத வகுப்பறை பள்ளிகளில் காணப்படக் கூடாது. ஆசிரியர்கள் வகுப்பறைகளுக்கு பாடக்குறிப்பேடுடன் கற்றல், கற்பித்தல் கருவிகளையும் எடுத்து செல்ல வேண்டும். பள்ளிகளில் தொலைபேசி பதிவேடு, நகர்வு பதிவேடு ஆகியவற்றை பராமரிக்க வேண்டும்.

மன்ற செயல்பாடுகள், மதிப்பெண் பதிவேடு பராமரிப்பு, பள்ளி இணை செயல்பாடுகள் ஆகியவை சிறப்பான முறையில் நடைபெற வேண்டும். மெல்ல கற்போருக்கான பதிவேடு, தனித்திறன் மாணவர்கள் பதிவேடு ஆகியவற்றையும் ஒவ்வொரு ஆசிரியரும் பராமரிக்க வேண்டும். பள்ளிகளில் சுற்றுப்புறம் மற்றும் சுகாதாரத்தை முழுமையாக பராமரிக்க வேண்டும். தூய்மை கணக்கெடுப்பு ஊரகம் 2018-ன் படி மத்தியக்குழு வருகிற 31-ந்தேதி வரை எந்த நேரமும் பள்ளிகளை பார்வையிட வரலாம்.

எனவே எந்த நேரமும் பள்ளி வளாகமும், கழிப்பறைகளும் தூய்மையாக காணப்பட வேண்டும். மேலும் கழிப்பறைகளை பயன்படுத்துவது குறித்து ஒவ்வொரு பள்ளியிலும் காலை இறைவணக்க கூட்டத்தில் மாணவர்களை உறுதிமொழி எடுக்க செய்து, அதன் மூலமாக மாணவர்களின் பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசின் தேசிய கல்வி உதவித்தொகைக்கு உரிய முறையில் மாணவர்களை விண்ணப்பிக்க செய்து, அவர்களுக்கு உதவித்தொகை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட கல்வி அதிகாரிகள் சாமி.சத்தியமூர்த்தி, குணசேகரன், திராவிடச்செல்வம், முதன்மைக்கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் ஜீவானந்தம் மற்றும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல் நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story