தரமான காளான் வித்து உற்பத்தியில் கணிசமான லாபம் ஈட்ட முடியும், விவசாயிகள் தகவல்


தரமான காளான் வித்து உற்பத்தியில் கணிசமான லாபம் ஈட்ட முடியும், விவசாயிகள் தகவல்
x
தினத்தந்தி 12 Aug 2018 10:30 PM GMT (Updated: 12 Aug 2018 7:51 PM GMT)

தரமான காளான் வித்து உற்பத்தியில் கணிசமான லாபம் ஈட்ட முடியும் என்று கோத்தகிரி பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறினர்.

கோத்தகிரி,

நீலகிரி மாவட்டத்தில் தயாராகும் மொட்டு காளான் சுவை மிகுந்தது. அசைவ உணவிற்கு ஈடான சுவையை தருவதால் சுப நிகழ்ச்சிகளின்போது தவிர்க்க முடியாத உணவாகவும், ஓட்டல்களில் வாடிக்கையாளர்கள் விரும்பும் உணவாகவும் காளான் இருக்கிறது. அதிலும் நீலகிரி மொட்டு காளானுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காளான் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். காளான் வளர்ப்பிற்கு தனியாக குடில் அமைத்து, அதில் காளான் வளர்ப்பு பைகளை அடுக்கி, அதில் தரமான விதைகளை விதைத்து பராமரிக்க வேண்டியது அவசியமாகும். குறிப்பாக காளான் வித்து உற்பத்தி செய்வது மிக முக்கியம். இதுகுறித்து கோத்தகிரி கோட்டஹால் பகுதியில் காளான் வித்து உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது:–

காளான் வளர்ப்பில் ‘காளான் வித்து உற்பத்தி செய்தல்‘ முக்கிய பங்கு வகிக்கிறது. திசு வளர்ப்பு நுணுக்கத்துடன் பெட்ரிக் தட்டு அல்லது சோதனை குழாயில் வளர்க்கப்படும் மூல வித்தை கொண்டு தாய் வித்து மற்றும் அதிலிருந்து படுக்கை வித்து தயாரிக்கப்படுகிறது. மூல வித்தை சோளம் போன்ற தானியங்களில் வளர செய்து, அவற்றை தாய் வித்தாகவும் பயன்படுத்தலாம். இவ்வாறு உற்பத்தி செய்யும் தாய் வித்தில் இருந்து 2 படுக்கை வித்துகளை தயாரிக்கலாம்.

தரமான சோளங்களை சுத்தமான நீரில் 30 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். அவை வெடிக்க ஆரம்பிக்கும் போது அல்லது விரல்களுக்கு இடையில் வைத்து நசுக்க முடிகிற நிலையின்போது அடுப்பில் இருந்து இறக்கிவிட வேண்டும். பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு, சோளங்களை சமதள தரையில் பரப்பி ஈரப்பதம் போக உலர்த்த வேண்டும். உலர் எடை அடிப்படையில் ஒரு கிலோ சோளத்துக்கு 20 கிராம் என்ற அளவில் கால்சியம் கார்பனேட் தூளை நன்கு கலந்துவிட வேண்டும். சோளங்கள் ஒன்றோடொன்று ஒட்டாத வகையில் இருக்க வேண்டும்.

பின்னர் 15 இன்ச் நீளமும், 11 இன்ச் அகலமும் கொண்ட புரபலீன் பைகளில் தலா 300 கிராம் சோளத்தை நிரப்பி, அதன் வாய்ப்பாகத்தை ஈரம் உறிஞ்சாத பஞ்சு மூலம் அடைக்க வேண்டும். மேலும் காகித துண்டினால் காற்று போகாத வகையில் பஞ்சு வைத்த பகுதியை மூடி நூலால் இறுக்கமாக கட்டிவிட வேண்டும். அந்த பைகளை அழுத்த வெப்பமூட்டியில்(ஆட்டோகிளேவ்) வைத்து 200 பவுண்டு அழுத்தத்தில் 2 மணி நேரத்துக்கு கிருமி நீக்கம் செய்ய வேண்டும். இதையடுத்து குளிர்விக்கப்பட்ட பிறகு அந்த பைகளை வெளியே எடுத்து, புறஊதா கதிர்களை கொண்ட வளர்ச்சி ஊடகத்தில் 20 நிமிடங்கள் வைக்க வேண்டும். பின்னர் பூசண வளர்ச்சியை 2 துண்டுகளாக வெட்டி தனித்தனி பாட்டில்களில் வைக்க வேண்டும். அந்த பாட்டில்களை அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும். இந்த முறையே படுக்கை வித்து தயாரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

ஒரு தாய் வித்து தயாரித்த பாட்டிலில் உள்ள பூசணத்தில் இருந்து சுமார் 30 படுக்கை வித்துகள் உற்பத்தி செய்யலாம். பூசணமிட்ட படுக்கை வித்து பைகளை தனி அறையில் வைத்து பாதுகாத்து வந்தால், 15 நாட்களில் அந்த பை முழுவதும் காளான் பூசணம் நன்கு பரவி காணப்படும். தொடர்ந்து 18 முதல் 20 நாட்களில் வளர்ந்த அதிலிருந்து படுக்கை வித்து தயாரிக்க பயன்படுத்தலாம். வித்து பைகள் தயாரித்த 30 நாட்களுக்குள் பயன்படுத்தப்பட்டு விட்டால் சிறந்தது. இவ்வாறு தயாராகும் தரமான தாய் வித்து கிலோ ஒன்றுக்கு ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் செயற்கை முறையில் சோளத்தை வெப்பமூட்டி உலர்த்தி விரைவாக காளான் வித்து தயாரித்தால், 12 நாட்களுக்கு ஒருமுறை தயாரிக்க முடியும். ஆனால் அது தரம் குறைந்ததாக இருக்கும். எனவே தரமான காளான் வித்துக்கு மிகுந்த வரவேற்பு எப்போதும் இருக்கிறது. இதன் காரணமாக தரமான காளான் வித்து உற்பத்தியில் குடிசை தொழிலாகவோ அல்லது பெரிய அளவிலோ விவசாயிகள் ஈடுபட்டால் கணிசமான லாபத்தை ஈட்ட முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story