27 தனியார் விடுதிகளுக்கு ‘சீல்’: ஆதிவாசிகள், பொதுமக்கள் பலர் வேலையிழப்பு; மசினகுடியில் இன்று முதல் முழு அடைப்பு
27 தனியார் விடுதிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டதை தொடர்ந்து ஆதிவாசிகள், பொதுமக்கள் பலர் வேலையிழந்து உள்ளனர். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மசினகுடியில் இன்று முதல் முழு அடைப்பு நடைபெறுகிறது.
மசினகுடி,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள யானைகள் வழித்தடங்களை பாதுகாக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு நடைபெற்று வரும் நிலையில், முதற்கட்டமாக 27 தனியார் தங்கும் விடுதிகளை சீல் வைக்க கடந்த 9–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட 27 தங்கும் விடுதிகளுக்கு நேற்று காலை முதல் இரவு வரை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இந்த தங்கும் விடுதிகளில் பொக்காபுரம், மசினகுடி, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆதிவாசி மக்களும், 500–க்கும் மேற்பட்ட மக்களும் பணியாற்றி வந்தனர்.
சுமார் 20 ஆண்டுகள் வரை தனியார் தங்கும் விடுதிகளை நம்பி அவர்கள் வாழ்ந்து வந்தனர். அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு தங்களது குழந்தைகளின் கல்வி, மருத்துவம், குடும்ப செலவை கவனித்தனர். இந்த நிலையில் 27 விடுதிகள் மூடப்பட்டதை தொடர்ந்து அவர்களது வேலைவாய்ப்பு பறிபோய் விட்டது. இதனால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கும் அவலநிலை ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக கால்நடைகளை வளர்த்து வருமானம் பெற்று வந்த மக்கள் வறட்சியாலும், நோய்வாய்ப்பட்டும் கால்நடைகள் இறந்தது. அதன் பின்னர் மாற்று தொழிலாக தங்கும் விடுதிகளுக்கு சென்று பணிபுரிந்து வந்தனர்.
ஆனால், தற்போது தங்கும் விடுதிகள் சீல் வைக்கப்பட்டு அங்கும் பணிகள் இல்லாததால் அவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி முதற்கட்டமாக 27 தனியார் விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 390 குடியிருப்புகள், 77 விவசாய விளைநிலங்கள் உள்பட 782 கட்டிடங்களின் உரிமையாளர்கள் தங்களது ஆவணங்களை மாவட்ட நிர்வாகத்தினரிடம் சமர்ப்பித்து சரிபார்க்குமாறு உத்தரவிட்டு, அதற்கு 2 மாதம் கால அவகாசம் அளித்து உள்ளது. இதனால் விரைவில் 782 கட்டிடங்களை காலி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் குடியிருப்புகளுக்கு எந்தவித பாதிப்பும் இருக்காது என்று கூறிய நிலையில், அச்சம் அடைந்து உள்ள மசினகுடி, வாழைத்தோட்டம் பகுதி பொதுமக்கள் அடுத்த கட்ட நீதிமன்ற நடவடிக்கையில் இருந்து ஏழை, எளிய மக்களின் 782 கட்டிடங்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் தமிழக அரசு கொள்கை ரீதியான முடிவை எடுத்து குடியிருப்புகளையும், விவசாய விளைநிலங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) முதல் தொடர்ந்து 3 நாட்கள் முழு அடைப்பு நடத்த முடிவு செய்து உள்ளனர். இதனால் மசினகுடி பகுதியில் உள்ள 250–க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்படுவதுடன், 150–க்கும் மேற்பட்ட ஜீப்கள் இயங்காது. மேலும் மசினகுடி பகுதி மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்பமாட்டோம் என்று முடிவு எடுத்து உள்ளனர்.