நரிப்பையூரில் ரூ.3ஆயிரம் கோடியில் 500 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம், அதிகாரிகள் குழுவினர் நேரில் ஆய்வு
நரிப்பையூரில் மின்வாரியத்தின் சார்பில் ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பில் சூரிய ஒளியை பயன்படுத்தி 500 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட உள்ளதையொட்டி அதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களை மின்வாரிய அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
ராமநாதபுரம்,
கடலாடியில் ரூ.24 ஆயிரம் கோடியில் 4 ஆயிரம் மெகாவாட் அனல் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்படும் என்று ஜெயலலிதா முதல்– அமைச்சராக இருந்தபோது சட்டசபையில் அறிவித்து இருந்தார். இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன. அனல் மின் நிலையம் அமைப்பதற்காக 3 இடங்களில் 6 ஆயிரம் ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு அரசிடம் அறிக்கை அளிக்கப்பட்டது. இந்த இடத்தில் அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி மறுத்துவிட்டதோடு மாற்று இடம் ஏற்பாடு செய்ய உத்தரவிட்டது.
இதன்படி வேறு ஒரு இடம் கண்டறியப்பட்டு அறிக்கை அளிக்கப்பட்டபோதிலும் அந்த இடம் கடற்கரையில் இருந்து 10 கிலோ மீட்டருக்குள் இருப்பதால் மின் நிலையத்தில் இருந்து வெளியாகும் தண்ணீரை கடலுக்குள் விடுவதற்கு கடற்கரை ஒழுங்கு முறை ஆணையம் சம்மதிக்கவில்லை. இதன்காரணமாக இந்த திட்டத்தினை தற்காலிகமாக நிறுத்தி வைத்து விட அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. இதற்கு மாற்றாக கடலாடி பகுதியில் சூரிய ஒளியை பயன்படுத்தி புதிய மின் உற்பத்தி நிலையம் அமைக்க அரசு முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டு ஆரம்ப கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதன்படி கடலாடி அருகே நரிப்பையூர் பகுதியில் முதன் முறையாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் சூரிய ஒளியை பயன்படுத்தி ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பில் 500 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தேவைப்படும் 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலம் 3 இடங்களில் ஏற்கனவே அனல்மின் நிலையத்திற்கு என தேர்வு செய்து வைத்துள்ளதால் அதனை பயன்படுத்த மின் வாரியம் முடிவு செய்துள்ளது.
சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு இருக்காது என்பதால் திட்டத்தினை விரைந்து நிறைவேற்ற பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதன் முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்ய மின்வாரிய உயர் அதிகாரிகள் குழுவினர் ராமநாதபுரம் வந்துள்ளனர். இவர்கள் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.