மாவட்ட செய்திகள்

சேலத்தில் ஆடு, கோழி இறைச்சி கடைகளில் விற்பனை அமோகம் + "||" + In Salem Selling of goat and poultry meat stores is sturdy

சேலத்தில் ஆடு, கோழி இறைச்சி கடைகளில் விற்பனை அமோகம்

சேலத்தில் ஆடு, கோழி இறைச்சி கடைகளில் விற்பனை அமோகம்
சேலத்தில் ஆடு, கோழி இறைச்சி கடைகளில் நேற்று விற்பனை அமோகமாக இருந்தது.
சேலம்,

ஆடி மாதத்தில் சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் 22 நாட்கள் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படும். அதன்படி இந்தாண்டு கோவிலில் பூச்சாட்டுதலுடன் ஆடித்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 7-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை கோவிலில் பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதையொட்டி அம்மாபேட்டை, செவ்வாய்பேட்டை, குகை, பொன்னம்மாபேட்டை, பெரமனூர், வின்சென்ட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன், காளியம்மன் கோவில்களிலும் பக்தர்கள் பொங்கல் வைத்தல், அலகு குத்துதல், தீ மிதிவிழா, அக்னி கரகம், பூங்கரகம், மொட்டை அடித்தல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடனை செலுத்தினர்.

ஆடித்திருவிழாவில் புதன்கிழமைகளில் பெரும்பாலான வீடுகளில் அசைவம் சாப்பிடுவது வழக்கம். ஆனால் தி.மு.க.தலைவர் கருணாநிதி இறப்பால் கடந்த 8-ந் தேதி கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இறைச்சி கடைகளும் மூடப்பட்டிருந்தன. அன்றைக்கு இறைச்சி வாங்காதவர்கள் நேற்று இறைச்சி எடுப்பதற்காக அதிகளவில் அசைவ பிரியர்கள் கடைகளில் குவிந்தனர். இதனால் ஆடு, கோழி இறைச்சி கடைகளிலும், மீன் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. இறைச்சி விற்பனை அமோகமாக நடைபெற்றது.

இதுகுறித்து சேலத்தை சேர்ந்த இறைச்சி வியாபாரிகள் கூறியதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் ஆடித்திருவிழாவில் புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி விற்பனை அமோகமாக இருக்கும். ஆடித்திருவிழாவின்போது ஒரு வாரத்திற்கு முன்பே விருத்தாச்சலம், விழுப்புரம், தம்மம்பட்டி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஆடுகளை விலைக்கு வாங்கி வருவோம்.

கோழியை பொருத்தமட்டில் நாமக்கல், பல்லடம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கோழிப்பண்ணையில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படும். கடலூர், நாகையில் இருந்து கடல் மீன்கள் அதிகளவில் விற்பனைக்கு வருகிறது. இதுதவிர, மேட்டூர் அணையில் இருந்து மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. விடுமுறை தினமான நேற்று ஒரு கிலோ ஆட்டு இறைச்சி (மட்டன்) ரூ.450 முதல் ரூ.500 வரையிலும், கோழி இறைச்சி ரூ.140 முதல் ரூ.160 வரையிலும் விற்பனை ஆனது. அதேபோல் விற்பனையும் அமோகமாக நடந்தது.இவ்வாறு அவர்கள் கூறினர்.