மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம். மையத்தில் திடீர் தீ பல லட்சம் ரூபாய் எரிந்து நாசம்? + "||" + ATM. Sudden fire burning in the center of the downfalls of many millions?

ஏ.டி.எம். மையத்தில் திடீர் தீ பல லட்சம் ரூபாய் எரிந்து நாசம்?

ஏ.டி.எம். மையத்தில் திடீர் தீ பல லட்சம் ரூபாய் எரிந்து நாசம்?
திண்டுக்கல்லில் ஏ.டி.எம். மையம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல், 


திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில், தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த மையத்தில் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பணம் எடுக்க வசதியாக 3 ஏ.டி.எம். எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஏ.டி.எம். மையத்தில் இருந்து நேற்று இரவு 11.30 மணி அளவில் திடீரென கரும்புகை வெளியேறியது. இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இதுகுறித்து நகர் வடக்கு போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். ஆனால் தீயணைப்பு படையினர் வருவதற்குள், 3 ஏ.டி.எம். எந்திரங்களும் கொழுந்து விட்டு எரியத்தொடங்கின. மேலும் அருகில் இருந்த 2 கடைகளுக்கும் தீ பரவியது.

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் அதற்குள் 3 ஏ.டி.எம். எந்திரங்களும் தீயில் கருகின. மேலும் அந்த எந்திரங்களில் இருந்த பல லட்சம் ரூபாய் தீயில் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதேபோல் 2 கடைகளில் இருந்த பொருட்களும் சேதம் அடைந்தன.

இதுகுறித்து தீயணைப்பு வீரர்கள் கூறும்போது, மின் கசிவு காரணமாக தீப்பிடித்திருக்கலாம். வங்கி அதிகாரிகள் வந்தால் தான் பணம் எரிந்ததா, இல்லையா? என்பது தெரியவரும் என்றனர். ஏ.டி.எம். மையத்தின் முன்பு மின்சார டிரான்ஸ்பார்மர் உள்ளது. அதிர்ஷ்டவசமாக அதில் தீப்பிடிக்கவில்லை.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. திண்டுக்கல்லில், 3 ஏ.டி.எம். எந்திரங்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, ஏ.டி.எம். மையத்தில் மின்கசிவால் தீ விபத்து நடந்து இருக்கலாம். தீ விபத்து குறித்து சம்பந்தப்பட்ட வங்கி கிளை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அந்த வங்கிக்கு சொந்தமான அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் பணம் நிரப்பும் பணியை சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தினர் தான் மேற்கொள்கின்றனர்.
இதனால் அவர்கள் முன்னிலையில் தான் தீயில் கருகிய ஏ.டி.எம். எந்திரங்களை திறந்து பார்க்க வேண்டும். அதன் பின்னர் தான் பணம் அனைத்தும் தீயில் எரிந்துவிட்டதா? இல்லையா? என்பது தெரியவரும். அந்த நிறுவனத்தினர் நாளை (அதாவது இன்று) தான் திண்டுக்கல்லுக்கு வர உள்ளதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் அது வரை தீ விபத்து நடந்த ஏ.டி.எம். மையத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, என்றனர்.