கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை


கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 12 Aug 2018 10:15 PM GMT (Updated: 12 Aug 2018 8:57 PM GMT)

வேப்பனப்பள்ளி அருகே கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க அ.தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வருவாய்த்துறை அதிகாரிகள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

வேப்பனப்பள்ளி,

தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 7-ந்தேதி மரணம் அடைந்தார். அவருக்கு வேப்பனப்பள்ளி அருகே நாச்சிக்குப்பம் பஸ் நிலையத்தில் நினைவிடம் கட்ட தி.மு.க. வினர் முடிவு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க.வினர் செய்து வந்தனர்.

இந்த நிலையில் அ.தி.மு.க.வினர் சிலர் அங்கு நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் புகார் செய்தனர். இதையடுத்து கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டன. இதன் காரணமாக நேற்று அந்த பகுதியில் பிரச்சினை ஏற்படும் சூழ்நிலை உருவானது. தகவல் அறிந்து கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சரவணன் மற்றும் அதிகாரிகள் அங்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள்.

அப்போது தி.மு.க.வினர் அங்கு கருணாநிதிக்கு நினைவிடம் கட்ட அனுமதி மறுத்தால் அருகில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு உள்ள நினைவிடத்தை அகற்ற வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வினர் ஆகிய 2 கட்சிகளைச் சேர்ந்தவர்களையும் அதிகாரிகள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

இதில் சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் நினைவிடம் அமைக்கும் பணியில் தி.மு.க.வினர் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் நேற்று சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. 

Next Story