மாவட்ட செய்திகள்

மேட்டூர் அணை ஒரே ஆண்டில் 2-வது முறையாக நிரம்பியது: சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது + "||" + The Mettur Dam was completed in the 2nd year of the year: There is a crowd of tourists

மேட்டூர் அணை ஒரே ஆண்டில் 2-வது முறையாக நிரம்பியது: சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது

மேட்டூர் அணை ஒரே ஆண்டில் 2-வது முறையாக நிரம்பியது: சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது
மேட்டூர் அணை ஒரேஆண்டில் 2-வது முறையாக நிரம்பியதைத் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேட்டூர்,

கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் பருவமழை கடந்த மே மாதம் இறுதியில் தீவிரம் அடைந்தது. இதனால் கர்நாடகத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இந்த அணைகள் தனது முழு கொள்ளளவை எட்டின. இந்த அணைகளுக்கு வந்த நீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக - கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை கடந்து சேலம் மாவட்டம் மேட்டூரை வந்தடைந்தது. இந்த தண்ணீர் வரத்து காரணமாக மேட்டூர் அணை நீர்மட்டம் நாள்தோறும் உயர்ந்து கொண்டே வந்தது.


கடந்த ஜூலை மாதம் 23-ந்தேதி மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. 5 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணை நிரம்பியது. அணைக்கு நீர்வரத்து அதிகளவில் இருந்ததால் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டது. சுமார் 10 நாட்களுக்கு பிறகு அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது. எனவே இந்த அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டது. இருப்பினும் டெல்டா பாசன தேவைக்காக அணையில் இருந்து தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்பட்டது.

அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் அளவை விட அணைக்கு வந்த நீரின் அளவு குறைந்தது. இதனால் அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது. அணை நீர்மட்டமும் 116 அடியாக குறைந்தது.

இந்தநிலையில் கர்நாடகத்தில் பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்தது. இதனால் அங்குள்ள அணைகளில் இருந்து வினாடிக்கு 1 லட்சம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்ததன் காரணமாக அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் காலை 119 அடியாக உயர்ந்தது. அன்று மதியமே அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டிப்பிடித்தது. இதன்மூலம் இந்த ஆண்டில் 2-வது முறையாக அணை நிரம்பி கடல் போல் காட்சி அளிக்கிறது. இதைத்தொடர்ந்து கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அணை நிரம்பிய பின்னரும் தண்ணீர் வரத்து அதிகளவில் உள்ளது. நேற்று முன்தினம் மாலை வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அன்று இரவே அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

நீர்திறப்பு எதிரொலியாக மேட்டூர் அனல் மின் நிலையம் அருகே உள்ள தார்சாலையை தண்ணீர் மூழ்கடித்தது. நேற்று காலை அணைக்கு நீர்வரத்தானது வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்மட்டம் 120.20 அடியாக இருந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வினாடிக்கு 1 லட்சத்து 15 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

இந்த ஆண்டில் 2-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியதையடுத்து உபரிநீர் போக்கியான 16 கண் பாலம் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனை பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மேட்டூருக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

மொபட், மோட்டார் சைக்கிள், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக வந்து நிரம்பிய அணையை கண்டுகளித்து செல்கிறார்கள். சேலம் மாவட்டம் மட்டுமின்றி நாமக்கல், ஈரோடு, தர்மபுரி உள்பட பிற மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மேட்டூருக்கு வந்த வண்ணம் உள்ளனர். அணை இடதுகரை, வலதுகரை கால்வாய், உபரிநீரை வெளியேற்றும் பாதையில் அமைக்கப்பட்ட புதிய பாலம், மேட்டூர் அனல்மின் நிலைய பாலம், பூங்கா ஆகிய பகுதிகளில் மக்கள் கூட்டமாக காட்சி அளிக்கிறது.

மேட்டூர் பூங்கா அருகே எங்கு பார்த்தாலும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வாகன அணிவகுப்பு போல் காட்சி தருகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேட்டூர் 16 கண் பாலம் அருகே அமைந்துள்ள புதிய பாலத்தில் 2 சக்கர வாகனம் உள்பட எந்த வாகனமும் செல்வதற்கு போலீசார் அனுமதிக்கவில்லை.

இதேபோல் மேட்டூரில் இருந்து மலைப்பாதை வழியாக வெளியூர் செல்ல வரும் வாகனங்கள் சேலம் கேம்ப் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு தொட்டில்பட்டி வழியாகவும், மேட்டூரில் இருந்து கொளத்தூர் செல்லும் பஸ்கள் பொன்நகர், குள்ளவீரன்பட்டி வழியாகவும் திருப்பி அனுப்பப்படுகிறது.

சுற்றுலா பயணிகள் வருகையையடுத்து வருவாய் துறையினரும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேட்டூர் உதவி கலெக்டர் (பொறுப்பு) ராமதுரைமுருகன் மேற்பார்வையில் தாசில்தார் அறிவுடைநம்பி தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் துறையினர் ஆகியோர் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளில் காவிரி கரையோரத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வெள்ளம் வீடுகளை மூழ்கடித்தபடி செல்கிறது. அங்கிருந்த பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.