மாவட்ட செய்திகள்

பெருக்கெடுத்து ஓடும் காவிரியின் அழகை ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் இத்தாலி குடும்பத்தினர் சிறப்பு பூஜை + "||" + A special puja of the family of Italy for tourists to enjoy the beauty of the flowing Cauvery

பெருக்கெடுத்து ஓடும் காவிரியின் அழகை ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் இத்தாலி குடும்பத்தினர் சிறப்பு பூஜை

பெருக்கெடுத்து ஓடும் காவிரியின் அழகை ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் இத்தாலி குடும்பத்தினர் சிறப்பு பூஜை
திருச்சியில் பெருக்கெடுத்து ஓடும் காவிரியின் அழகை ரசிப்பதில் சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டினார்கள். இத்தாலி குடும்பத்தினர் சிறப்பு பூஜை நடத்தினார்கள்.
திருச்சி,

தமிழகத்தின் ஜீவாதாரமான நதியாக விளங்குவது காவிரி ஆறு. கர்நாடகத்தில் பெய்து வரும் கன மழையினால் இந்த ஆண்டு மேட்டூர் அணை இரண்டாவது முறையாக நிரம்பி உள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் முக்கொம்பு மேலணைக்கு வினாடிக்கு 91 ஆயிரம் கன அடியாக வந்து சேர்ந்தது. முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரியில் வினாடிக்கு 30 ஆயிரம் கன அடியும், கொள்ளிடத்தில் வினாடிக்கு 60 ஆயிரம் கன அடியுமாக பிரித்து திறக்கப்பட்டது.


காவிரியில் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து வினாடிக்கு 30 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் திருச்சி காவிரி ஆற்றில் தண்ணீர் இரு கரைகளையும் தொட்ட படி செல்கிறது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, கீதாபுரம் படித்துறை, சிந்தாமணி படித்துறை, தில்லை நாயகம் படித்துறை பகுதிகளில் தண்ணீர் இரு கரைகளையும் தொட்டபடி செல்கிறது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாள் என்பதால் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெருக்கெடுத்து ஓடும் காவிரியின் அழகை ரசித்தனர். சிலர் படிக்கட்டுகளில் இறங்கி ‘செல்பி’ எடுப்பதில் ஆர்வம் காட்டினார்கள். இதனால் நேற்று அம்மா மண்டபம் படித்துறை களை கட்டியது.

அம்மா மண்டபம் படித்துறையில் வழக்கமாக புரோகிதர்கள் முன்னோர்களுக்கு திதி கொடுப்பது, பரிகார பூஜை நடத்துவது போன்றவற்றை செய்து வருகிறார்கள். காவிரியின் அழகை ரசித்து கொண்டிருந்த இத்தாலி நாட்டை சேர்ந்த ஒரு தம்பதியினர் மற்றும் அவர்களது இரு பெண் குழந்தைகள் ஆகியோர் ஒரு புரோகிதர் முன் அமர்ந்து காவிரி தாய்க்கு சிறப்பு பூஜை நடத்தினர். புரோகிதர் கூறிய மந்திர சொற்களை அவர்களும் திரும்ப சொல்லி மலர்களை தூவினார்கள். தங்களது குழந்தைகளின் கல்வி சிறப்பாக அமைய சிறப்பு பூஜை நடத்தியதாக அவர்கள் குறிப்பிட்டனர்.