மாவட்ட செய்திகள்

தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது + "||" + DMK In the murder murder case, brother and brother arrested three persons

தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது

தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது
செம்பட்டி அருகே தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
செம்பட்டி, செம்பட்டி அருகே உள்ள நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் செல்வம் என்ற செல்வராஜ்(வயது55). தி.மு.க. ஒன்றிய பிரதிநிதியான இவர் குளங்களில் மீன் பிடிக்க குத்தகை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது தம்பி பொன்னையாவின் மருமகள் வாணி(24). கடந்த மார்ச் மாதம் நடந்த கோவில் விழாவில் நடனம் ஆடினார்.

இதை கண்டித்த செல்வராஜ், அவரது மனைவி லட்சுமி ஆகியோரை அதே ஊரை சேர்ந்த செல்வராஜின் உறவினர்களான அய்யப்பன், அவரது தம்பி அதிவீரபாண்டியன் ஆகியோர் தட்டிக்கேட்டனர். இதில் செல்வராஜ் தரப்பினருக்கும், அய்யப்பன் தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

இந்தநிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த செல்வராஜிடம் அய்யப்பன், அதிவீரபாண்டியன் உள்பட 4 பேர் கொண்ட கும்பல் வாக்குவாதம் செய்தனர். அப்போது, அய்யப்பன் தரப்பினர் திடீரென அரிவாளால் வெட்டியதில், செல்வராஜ் தலை, கழுத்து, முகம் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதை தடுக்க முயன்ற செல்வராஜின் பக்கத்து வீட்டுக்காரர் சடையாண்டியும் அரிவாள்வெட்டில் காயமடைந்தார். அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தற்போது மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த கொலை குறித்து செல்வராஜின் மனைவி லட்சுமி கொடுத்த புகாரின் பேரில், செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கும்பலை தேடி வந்தனர்.

இந்நிலையில் தப்பி ஓடிய கொலையாளிகள் நரசிங்கபுரம் அய்யப்பன்(31), அவரது தம்பி அதிவீரபாண்டியன்(25), நண்பர் திண்டுக்கல் மதன்(27) ஆகியோர் ஆத்தூர் காமராஜர் அணை பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கீதா தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி, குத்துவேல், இரும்பு கம்பி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அய்யப்பனின் அத்தை மகன் சுரேந்தர்(26) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.