தண்ணீர் இன்றி கருகிய கரும்பு பயிர்கள் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
கள்ளக்குறிச்சி பகுதியில் தண்ணீர் இன்றி கரும்பு பயிர்கள் கருகின. இதனால் கருகிய பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி அருகே ரோடு மாமானந்தல், மோ.வன்னஞ்சுர், மோகூர், நத்தமேடு, சோமண்டார்குடி, க.அலம்பளம், வாணியந்தல், தண்டலை, பம்புத்தோட்டம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு விவசாயமே பிரதான தொழிலாகும். இப்பகுதி விவசாயிகள் கிணற்று பாசனத்தை நம்பியே பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 5 மாதத்திற்கு முன்பு இப்பகுதி விவசாயிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலப்பரப்பில் கரும்பு சாகுபடி செய்து பராமரித்து வந்தனர். அவற்றுக்கு கிணற்று தண்ணீர் மூலம் பாசனம் செய்தனர்.
இந்த நிலையில் கரும்பு பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்து வந்த நிலையில், கள்ளக்குறிச்சி பகுதியில் போதிய அளவில் மழை பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் இன்றி கிணறுகள் வறண்டன. இதனால் கரும்பு பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டனர்.
கடந்த சில வாரங்களாக கரும்பு பயிர்களுக்கு முற்றிலும் தண்ணீர் பாய்ச்சாததால் பெரும் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த கரும்புகள் அனைத்தும் கருகின. பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து பராமரித்து வந்த கரும்பு பயிர்கள் தங்கள் கண் முன்னே கருகியதை கண்டு விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், எங்கள் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடந்த 5 மாதத்திற்கு முன்பு கிணற்று தண்ணீரை நம்பி கரும்பு சாகுபடி செய்தோம். அதற்காக ஒரு ஏக்கருக்கு சுமார் ரூ.30 ஆயிரம் வரை கடன் வாங்கி செலவு செய்து பராமரித்து வந்தோம். ஆனால் தண்ணீர் இன்றி கிணறுகள் வறண்டதால், 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்திருந்த கரும்பு பயிர்கள் கருகின.
இதுபற்றி வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் பலமுறை கூறியும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கருகிய பயிர்களை கணக்கெடுத்து உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story