நடைமுறை மாற்றங்களால் கலெக்டரிடம் மனு கொடுக்க வருவோர் தவிப்பு


நடைமுறை மாற்றங்களால் கலெக்டரிடம் மனு கொடுக்க வருவோர் தவிப்பு
x
தினத்தந்தி 13 Aug 2018 4:27 AM IST (Updated: 13 Aug 2018 4:27 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாளின் போது நடைமுறை மாற்றங்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை கலெக்டர் தலைமையில் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாவட்டம் முழுவதும் இருந்தும், குறிப்பாக கிராமப்புறங்களில் இருந்து அதிகமானவர்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய நம்பிக்கையுடன் மனுக்களுடன் கலெக்டர் அலுவலகம் வருகிறார்கள்.

கடந்த மாதம் வரை மனு கொடுக்க வரும் பொதுமக்களிடம் வெளிப்புறம் உள்ள ஒரு இடத்தில் அமர வைத்து அலுவலர்கள் மனுக்களை பெற்று அதை பதிவு செய்து ஒப்புகை சீட்டுடன் மனுதாரர்களிடம் வழங்கி வந்தனர். அதன் பின்னர் பொதுமக்கள் கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் வழியாக கூட்டஅரங்கிற்கு சென்று கலெக்டரிடம் தங்கள் மனுக்களை கொடுத்து வந்தனர். கலெக்டரும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்துவது வழக்கம்.

தற்போது கலெக்டர் அலுவலகத்தில் இரு நுழைவு வாயில்களிலும் பயோமெட்ரிக் கதவு பொறுத்தப்பட்டபின்னர் பொதுமக்களுக்கு அந்த வழியாக செல்ல வாய்ப்பு இல்லாத நிலையில் கலெக்டர் அலுவலக கட்டிடத்தின் பின்புறம் உள்ள கதவு வழியாக பொதுமக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அப்போதும் போலீசாரால் அவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். பின்பு மனு பதிவு செய்யும் இடத்துக்கு மனுதாரர்கள் அனுப்பப்படுகின்றனர். அந்த இடத்தில் ஒரே நேரத்தில் 100–க்கும் மேற்பட்டவர்கள் ஒட்டு மொத்தமாக மனுக்களை பதிவு செய்ய முன்டியடிக்கும் நிலை ஏற்படுகிறது.

இதனால் மனுக்களை பதிவு செய்யும் அலுவலர்களுக்கும், மனுதாரர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் நிலை உள்ளது. அலுவலர்களும், மனுதாரர்களிடம் மிகுந்த கோபத்துடன் நடந்து கொள்ளும் நிலையும் இருந்து வருகிறது. மனுக்களை பதிவு செய்யும் இடத்தில் மின் தடை ஏற்பட்டால் மனுக்களை பதிவு செய்ய முடியாத நிலையும் ஏற்படுகிறது. இதனால் தொலைதூர கிரமங்களில் இருந்து வரும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் மக்கள் குறைதீர்க்கும் நாள் நிகழ்ச்சிக்கு மனுக்கள் கொடுக்க வரும் பொதுமக்களை தவிக்க விடாமல் எளிதான நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது. தொடர்ந்து தற்போது உள்ள நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டால் மனுக்கள் கொடுக்க வரும் கிராம மக்கள் நம்பிக்கை இழக்கும் நிலை ஏற்பட்டுவிடும்.


Next Story