சர்வதேச வேளாண், உணவு பொருள் வர்த்தக பொருட்காட்சி மதுரையில் தொடங்கியது
சர்வதேச அளவிலான வேளாண், உணவு பொருள் வர்த்தக பொருட்காட்சி மதுரையில் தொடங்கியது.
மதுரை,
தமிழ்நாடு சேம்பர் பவுண்டேஷன் சார்பில் சர்வதேச அளவிலான வேளாண் மற்றும் உணவுப்பொருள் வர்த்தக பொருட்காட்சி, மதுரை வேலம்மாள் ஐடா ஸ்கட்டர் வர்த்தக மையத்தில் நேற்று தொடங்கியது. ‘‘வைபிரண்ட் தமிழ்நாடு““ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த பொருட்காட்சி, தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில் நடக்கிறது.
தென்மண்டல ஏற்றுமதி நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் சக்திவேல் ரிப்பன் வெட்டி பொருட்காட்சியை திறந்து வைத்தார். சேம்பர் பவுண்டேஷன் தலைவர் ரத்தினவேலு தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன், கண்காட்சி தலைவர் திருப்பதிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வி.வி.வி. அன் சன்ஸ் தலைவர் முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேளாண்மை மற்றும் தொழில் துறையை ஒருங்கிணைக்கும் விதமாக நடத்தப்படும் இந்த கண்காட்சியில் 180–க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஸ்பெயின், இத்தாலி, துபாய், கத்தார் உள்பட 30 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்த வேளாண் பொருட்கள் உற்பத்தியாளர்கள், உணவு பொருள் தயாரிப்பாளர்கள், ஏற்றுமதியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். அவர்கள் தங்களது பொருட்களை அரங்கத்தில் வைத்திருந்தனர்.
இந்த கண்காட்சி வருகிற 15–ந் தேதி வரை நடக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் கண்காட்சி மாலை 6 மணி வரை நடக்கிறது. அங்குள்ள உணவு அரங்கத்தில் பாரம்பரிய உணவுகள் உள்பட மதுரையின் சிறப்பு உணவுகள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன.