திருட்டு பொருட்களை வாங்கியதாக கூறி விசாரணை: போலீசாரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்


திருட்டு பொருட்களை வாங்கியதாக கூறி விசாரணை: போலீசாரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 13 Aug 2018 4:45 AM IST (Updated: 13 Aug 2018 4:33 AM IST)
t-max-icont-min-icon

திருட்டு பொருட்களை வாங்கியதாக கூறி, விசாரணை நடத்திய போலீசாரை கண்டித்து ஆண்டார்கொட்டாரம் கிராமத்தினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

புதூர்,

மதுரை ஆண்டார்கொட்டாரம் பகுதியை சேர்ந்தவர் மீனாட்சி(வயது 32). இவர் கருப்பாயூரணி மற்றும் சுற்றுப்பகுதிகளில் பூட்டிக்கிடக்கும் வீடுகளில் பொருட்களை திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவர் மீது கருப்பாயூரணி, சிலைமான் போலீஸ்நிலையங்களில் 13 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு களஞ்சியம் கிராமத்தில் ஆறுமுகம் என்பவரின் வீட்டில் பொருட்களை திருடிக்கொண்டு தப்பிக்க முயன்றுள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை கையும், களவுமாக பிடித்து சிலைமான் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரித்துள்ளனர்.

இதில் சில வீடுகளில் திருடிய பொருட்களை ஆண்டார்கொட்டாரத்தில் வசிக்கும் சிலரிடம் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அவர் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் ஆண்டார்கொட்டாரத்துக்கு நேற்று வந்தனர். அங்கு சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரித்து உள்ளனர். மேற்கொண்டு விசாரணைக்கு போலீஸ் நிலையத்துக்கு வரவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனால் அவர்கள் ஆத்திரமடைந்து, எங்களிடம் போதுமான பணவசதி உள்ளது. நாங்கள் திருட்டு பொருட்களை வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்று போலீசாரிடம் தெரிவித்து தகராறில் ஈடுபட்டனர். இந்த தகவல் அப்பகுதியில் பரவியதால் கிராம மக்கள் ஒன்று திரண்டனர்.

தவறான தகவல் குறித்து விசாரணை நடத்த வந்த போலீசாரை கண்டித்து கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவல் அறிந்ததும் கருப்பாயூரணி போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் கிராம மக்கள் மறியலை கைவிட மறுத்தனர்.

பின்னர் போலீஸ் துணை சூப்பிரண்டு நல்லு சம்பவ இடத்துக்கு வந்து, உண்மைநிலை பற்றி விசாரித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார். இதையடுத்து மறியலை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.


Next Story