தனித்தனி விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலி


தனித்தனி விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 13 Aug 2018 3:15 AM IST (Updated: 13 Aug 2018 4:40 AM IST)
t-max-icont-min-icon

தனித்தனி விபத்தில் வாலிபர் உள்பட 2 பேர் பலியானார்கள்.

திருக்கோவிலூர்,


திருவண்ணாமலை மாவட்டம் அண்டம்பள்ளம் வல்லரசு நகரை சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் ரமேஷ்(வயது 30). இவர் நேற்று காலை தனது மனைவி நிர்மலாவுடன் ஒரு மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூரில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு வந்தார். பின்னர் கணவன்-மனைவி இருவரும் சாமி தரிசனம் செய்தனர்.

அப்போது ரமேஷ், நிர்மலாவிடம் நான் மணலூர்பேட்டையில் உள்ள ஒரு நண்பரை பார்த்து விட்டு மோட்டார் சைக்கிளில் வந்து விடுகிறேன். நீ அரகண்டநல்லூரில் இருந்து ரெயில் மூலம் ஊருக்கு சென்றுவிடு என கூறி, மனைவியை அரகண்டநல்லூர் ரெயில் நிலையத்தில் விட்டு விட்டு அங்கிருந்து மணலூர்பேட்டைக்கு புறப்பட்டார்.

குச்சிபாளையம் என்ற இடத்தில் தனியார் ஓட்டல் அருகே சென்றபோது, நாய் ஒன்று குறுக்கே ஓடியது. நாய் மீது மோதமல் இருக்க ரமேஷ் பிரேக்கை போட்டார். அப்போது அவரது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர மரத்தில் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த மணலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(65), விவசாயி. இவர் நேற்று காலையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எறஞ்சி பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று ராஜமாணிக்கம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவல் அறிந்த எடைக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பலியான ராஜமாணிக்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story