நாராயணசாமியின் கடிதம் கண்ணிய குறைவாக உள்ளது: சமூக வலைதளத்தில் கிரண்பெடி கருத்து
முதல்–அமைச்சர் நாராயணசாமியின் கடிதம் கண்ணிய குறைவாக உள்ளது என்று கூறி அதை கவர்னர் கிரண்பெடி திருப்பி அனுப்பினார்.
புதுச்சேரி,
புதுவை கவர்னர் கிரண்பெடிக்கும், முதல்–அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் இடையே அடிக்கடி மோதல் நடந்து வருகிறது. சில நாட்கள் இந்த மோதல் உச்சத்தில் இருப்பதும், பின்னர் அமைதியாக இருப்பதும் வாடிக்கையாக உள்ளது.
இவர்களது மோதல் போக்கு காரணமாக புதுவையில் நலத்திட்டங்கள் பல முடங்கி உள்ளன என்று பொதுமக்கள் பகிரங்கமாகவே விமர்சிக்க தொடங்கி உள்ளனர். இந்தநிலையில் தொடர்ந்து கவர்னருக்கான அதிகாரம் என்னென்ன? அமைச்சரவைக்கான அதிகாரம் என்ன என்பது குறித்து முதல்–அமைச்சர் நாராயணசாமி கவர்னருக்கு கடிதங்களை எழுதி வருகிறார்.
இந்த கடிதங்கள் தொடர்பாக கவர்னர் கிரண்பெடி நேற்று சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–
நேற்று முன்தினம் பத்திரிகைகளுக்கு பேட்டியளித்தது போலவே முதல்–அமைச்சர் எனக்கு கடிதம் அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தை திருப்பி அனுப்பிவிட்டேன்.
தொடர்ந்து முதல்–அமைச்சர் அலுவலகத்தின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் அவர் கடிதம் எழுதி வருகிறார். இதுபோன்று பல கடிதங்களை அவர் முன்பு அனுப்பி உள்ளார். அதை அவர் வாடிக்கையாகவும் கொண்டுள்ளார்.
அவரது அலுவலகத்தின் மேன்மையை கருதி இதுபோன்ற கடிதங்களை இனி எழுதமாட்டார் என்று நம்புகிறேன். இதனை பொதுமக்களின் தகவலுக்காக தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த பதிவில் கவர்னர் கிரண்பெடி கூறியுள்ளார்.
கவர்னரின் சமூக வலைதள பதிவு தொடர்பாக முதல்–அமைச்சர் நாராயணசாமியிடம் நிருபர்கள் கருத்துகேட்டனர். அதற்கு அவர் பதில் தெரிவிக்க மறுத்துவிட்டார்.