மதச்சார்பற்ற அணிகள் ஒன்று சேரும் காலகட்டத்தில் உள்ளோம் - நாராயணசாமி பேச்சு
மதச்சார்பற்ற அணிகள் ஒன்றுசேரும் காலகட்டத்தில் உள்ளோம் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
கருணாநிதியின் உருவப்பட திறப்பு மற்றும் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி புதுவை சற்குரு ஓட்டலில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருணாநிதியின் உருவப்படத்தை முதல்–அமைச்சர் நாராயணசாமி திறந்துவைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் பேசியதாவது:–
உலக தமிழர்களின் பாதுகாவலராக திகழ்ந்தவர் கருணாநிதி. அவரது வாழ்வு பல போராட்டங்கள் அடங்கியது. சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் எல்லோரது மனதிலும் இடம் பிடித்தார்.
அவர் கொண்டு வந்த திட்டங்கள் பலவற்றை மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. அவர் எங்கள் கூட்டணியில் இருந்தபோதும், எதிர் அணியில் இருந்தபோதும் அவரை மிகவும் ரசித்தவன் நான். தோல்வி கண்டு துவளாதவர்.
சிலர் ஓரிரு தேர்தல்களுக்கு இருந்துவிட்டு 3–வது தேர்தலில் காணாமல் போய்விடுவார்கள். தேசிய அரசியலிலும் முக்கியத்துவம் வாய்ந்தவராக பல பிரதமர்களை உருவாக்கிய பெருமை கருணாநிதியை சேரும். ஆடம்பர வாழ்க்கை என்பது அவருக்கு பிடிக்காது.
சோனியாகாந்தியை அனைவரும் வெளிநாட்டவர் என்று கூறியபோது, அவர் இந்திய பெண்மணி என்று பிரகடனப்படுத்தியவர் கருணாநிதி. அவரது மறைவினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை மு.க.ஸ்டாலின் நிரப்புவார்.
மதச்சார்பற்ற அணிகள் ஒன்றுசேரும் காலகட்டத்தில் நாம் உள்ளோம். கருணாநிதி போலவே நாம் அனைவரும் மக்களுக்காக பாடுபடுவோம்.
இவ்வாறு முதல்–அமைச்சர் நாராயணசாமி பேசினார்.
அமைச்சர் நமச்சிவாயம் பேசும்போது, கருணாநிதியின் பயிலரங்கில் பயிற்சி பெற்றவன் நான் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் சபாநாயகர் வைத்திங்கம், அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், ராதாகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், ஜெயமூர்த்தி, முன்னாள் முதல்–அமைச்சர் ஜானகிராமன், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம், பா.ம.க. செயலாளர் தன்ராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், திராவிடர் கழக தலைவர் வீரமணி, ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் சஞ்சீவி, புதிய நீதிக்கட்சி தலைவர் பொன்னுரங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னாள் முதல்–அமைச்சர் ரங்கசாமியும் கருணாநிதியின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன், என்.எஸ்.ஜே.ஜெயபால் எம்.எல்.ஏ. ஆகியோரும் வந்திருந்தனர்.