பெண்களுக்கு அரசியல் தெரிந்திருக்க வேண்டும் - நடிகை ஸ்ரீபிரியா பேச்சு
பெண்களுக்கு அரசியல் தெரிந்திருக்க வேண்டும் என்று சத்தியில் நடந்த கூட்டத்தில் நடிகை ஸ்ரீபிரியா பேசினார்.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஈரோடு வடக்கு மாவட்டத்துக்கு உள்பட்ட அந்தியூர், பவானி சாகர் தொகுதிகள் சார்பில் ‘மக்கள் நீதி மய்யம்’ கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சத்தியமங்கலம் நகர பொறுப்பாளர் எம்.பழனிவேல் தலைமை தாங்கினார். அந்தியூர் தொகுதி பொறுப்பாளர் பூக்கடை எ.சரவணகுமார் முன்னிலை வகித்தார்.
கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான ஸ்ரீபிரியா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறும்போது:–
செயல்வீரர்கள் கூட்டத்தில் பெண்கள் அதிகஅளவில் கலந்துகொள்ள வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. பல்வேறு கட்சிகளில் ஒருசிலர் வீரவசனம் பேசுவார்கள். செயல்பாடுகள் இருக்காது. ஆனால் மக்கள் நீதி மய்யம் கட்சியில் செயல்பாட்டுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பெண்களுக்கு அரசியல் தெரிந்திருக்க வேண்டும். அப்போதுதான் யாரும் ஏமாற்றம் அடைய வேண்டியதில்லை.
சினிமா துறையினருக்கு எதற்கு அரசியல் என்று கேட்கிறார்கள். எதற்கு சினிமாக்காரர்களும் மக்களுக்கு சேவை செய்யக்கூடாதா? மக்கள் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்களா?. விரைவில் தேர்தல் வரப்போகிறது. மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தினை மக்கள் நீதி மய்யம் கொண்டு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வகுத்த வழியில்தான் அனைவரும் பாடுபடுவது. நாளை (புதன்கிழமை) சுதந்திர தின விழாவையொட்டி ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் அந்தந்த பகுதி கட்சி நிர்வாகிகள் கலந்துகொள்ள வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், சத்தி ஒன்றிய தெற்கு பொறுப்பாளர் ஆர்.மோகன்குமார், வடக்கு ஒன்றிய செயலாளர் எஸ்.நடராஜ், ஒன்றிய பொறுப்பாளர்கள் தியாகு (அந்தியூர்), கார்த்திகேயன் (டி.என்.பாளையம்), மாவட்ட மகளிர் அணி பொறுப்பாளர் அம்சவள்ளி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முடிவில், அரியப்பம்பாளையம் பேரூராட்சி அமைப்பாளர் கே.மணிகண்டன் நன்றி கூறினார்.