மங்களூரு- மடிகேரி சாலையில் மண் சரிவு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


மங்களூரு- மடிகேரி சாலையில் மண் சரிவு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
x
தினத்தந்தி 13 Aug 2018 10:30 PM GMT (Updated: 13 Aug 2018 5:23 PM GMT)

சிக்கமகளூரு, குடகு மாவட்டங்களில் நேற்றும் தொடர்ந்து கனமழை பெய்தது. மங்களூரு-மடிகேரி சாலையில் மண்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 2 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

சிக்கமகளூரு,

சிக்கமகளூரு மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. மூடிகெரே, என்.ஆர்.புரா, சிருங்கேரி, கொப்பா ஆகிய தாலுகாக்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அந்தப்பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. தொடர் கனமழை காரணமாக துங்கா, பத்ரா ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று 5-து நாளாக சிக்கமகளூரு மாவட்டத்தில் கனமழை பெய்தது.

மூடிகெரே தாலுகா உதசே பகுதியில் பெய்த கனமழையால் வெள்ளநீர், அப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்தது. இதனால் நெற்பயிர்கள் நாசமாகின. இதனால் விவசாயிகள் மிகுந்த மனகவலையில் உள்ளனர். என்.ஆர்.புராவில் இருந்து கொப்பா செல்லும் சாலையில் நேற்று முன்தினம் காரில் நாகராஜ், அகமது ஆகியோர் சென்று கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக மரம் ஒன்று முறிந்து கார் மீது விழுந்தது. இதில் நாகராஜிம், அகமதுவும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் 2 பேரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மழையால் சிக்கமகளூரு மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான முல்லையன்கிரி மலைக்கு செல்லும் சாலையில் நேற்று முன்தினம் மண்சரிவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று இன்னொரு முக்கிய சுற்றுலா தலமான பாபாபுடன் கிரிக்கு செல்லும் வழியிலும் உள்ள சாலையில் மண்சரிவு ஏற்பட்டு உள்ளது. சிக்கமகளூருவில் இருந்து பாபாபுடன் கிரிமலைக்கு செல்லும் தனியார் பஸ்கள் அகழிகான் என்ற பகுதி வரை மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மண்சரிவை சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சிக்கமகளூருவில் பெய்து வரும் தொடர் கனமழையால் பொதுமக்களின் இயல்புவாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டு உள்ளது.

நேற்று பெய்த கனமழையால் மூடிகெரே, கொப்பா, என்.ஆர்.புரா, சிருங்கேரி, ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து கலெக்டர் ஸ்ரீரங்கையா உத்தரவிட்டார். இன்றும் கனமழை நீடித்தால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

இதேப்போல குடகு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கனமழையால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலைகளில் மரம் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மடிகேரியில் இருந்து மங்களூரு செல்லும் சாலையில் கனமழைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு விரிசல் ஏற்பட்டது. இதனால் அந்தப்பகுதியில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. சிறிய வாகனங்கள் மட்டுமே அந்த வழியாக சென்று வந்தன.

இந்த நிலையில் நேற்று பெய்த மழையின் போது மங்களூரு-மடிகேரி சாலையில் மதிநாடு என்ற இடத்தில் சாலையில் மண்சரிந்து விழுந்தது. பின்னர் பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மண்சரிவு சீரமைக்கப்பட்டது. 4 மணி நேரம் நடந்த இந்த பணியால் அந்த பகுதியில் வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. மண்சரிவு சீரமைக்கப்பட்ட போதிலும் அந்த வழியாக வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நேற்று விடுமுறை அளித்து கலெக்டர் ஸ்ரீவித்யா உத்தரவு பிறப்பித்தார்.


Next Story