அனைத்து வாயில்களும் ‘சீல்’ வைப்பு: போலீஸ் கட்டுப்பாட்டில் ஸ்டெர்லைட் ஆலை


அனைத்து வாயில்களும் ‘சீல்’ வைப்பு: போலீஸ் கட்டுப்பாட்டில் ஸ்டெர்லைட் ஆலை
x
தினத்தந்தி 14 Aug 2018 3:30 AM IST (Updated: 13 Aug 2018 11:03 PM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் ஆலையின் அனைத்து வாயில்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது. தற்போது ஆலை போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது என்று தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார்.

தூத்துக்குடி, 


தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுப்படி, ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ரசாயனங்கள் மற்றும் பல்வேறு பொருட்களை வெளியேற்றும் பணியை நிறுத்தி உள்ளோம். அங்கு தற்காலிகமாக பணியாற்றி வந்த தொழிலாளர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு உள்ளனர். கடந்த 2 நாட்களாக அனைத்து வாயில்களும் முழுமையாக ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளன.
அங்கிருந்து எந்த பொருட்களும் வெளியேற்றப்படவில்லை. தற்போது ஆலை முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆலை தரப்பில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி இதுவரை யாரும் தொடர்பு கொள்ளவில்லை.

ஸ்டெர்லைட் ஆலை தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை மூலம் மூடப்பட்டு உள்ளது. இதனால் ஆலை தரப்பில், நிர்வாக பணிகளை மேற்கொள்ள கோரிக்கை விடுத்தால் அவர்களின் கோரிக்கையை அரசுக்கு அனுப்பி, அரசின் உத்தரவுப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தேசிய பசுமை தீர்ப்பாயம் சுற்றுச்சூழல் மாசு தொடர்பாக அறிக்கை அளிக்க அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. மாசுகட்டுப்பாட்டு வாரியம் அதற்கான அறிக்கையை அனுப்பும். ஏற்கனவே மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தேவையான தகவல்கள் தயார் செய்யப்பட்டு உள்ளன. போதுமான அளவு தகவல்கள் உள்ளன. தேவைப்பட்டால் மீண்டும் மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்வார்கள்.

ஒருநபர் ஆணையம் 3 நாட்கள் விசாரணையை முடித்துள்ளது. மீண்டும் இந்த மாத இறுதியில் அந்த ஆணையம் தூத்துக்குடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story