சிவகாசி அருகே சமுதாயகூடம் கட்ட இடையூறு செய்பவர்களை கைது செய்ய கோரி போலீஸ் நிலையம் முற்றுகை


சிவகாசி அருகே சமுதாயகூடம் கட்ட இடையூறு செய்பவர்களை கைது செய்ய கோரி போலீஸ் நிலையம் முற்றுகை
x
தினத்தந்தி 14 Aug 2018 4:30 AM IST (Updated: 14 Aug 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே உள்ள என்.லட்சுமியாபுரத்தில் சமுதாயக்கூடம் கட்ட இடையூறு செய்யும் நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 300–க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ளது என்.லட்சுமியாபுரம். இந்த பகுதியில் 300–க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் பயன்படுத்த வசதியாக இந்த பகுதியில் ரூ.15 லட்சம் செலவில் சமுதாய கூடம் அமைக்க சிவகாசி யூனியன் அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி யூனியன் அதிகாரிகள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சம்மந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து அரசுக்கு சொந்தமான இடத்தில் சமுதாய கூடம் கட்ட முடிவு செய்தனர். அதன் பின்னர் அதற்கான நிதி ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து சமுதாய கூடம் கட்டும் பணி தொடங்கியது. தற்போது அந்த பணி நடைபெற்ற வரும் நிலையில் அந்த பணி தொடர்ந்து நடக்க கூடாது என்று சிலர் இடையூறு செய்வதாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த ஒரு வாரமாக சமுதாய கூடம் கட்டும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அச்சம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரித்து சமுதாய கூடம் கட்டும் பணியை தொடர்ந்து செய்ய வலியுறுத்தினர். ஆனால் போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாமல் அந்த பகுதியில் சமுதாய கூடம் கட்ட முடியாது என்று கட்டுமான தொழிலாளர்கள் பணிக்கு வரவில்லையாம். இதை தொடர்ந்து நேற்று காலை என்.லட்சுமியாபுரம் நாட்டாமை சமுத்திரக்கனி தலைமையில் அந்த கிராமத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என 300 பேர் 2 லாரிகளில் சிவகாசி கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு வந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் தேரோட்டம் மற்றும் சதுரகிரி மலைக்கு பாதுகாப்பு போலீஸ் அதிகாரிகள் சென்றுள்ளதால் போலீஸ் நிலையத்தில் இருந்த போலீசார் அதிகாரிகள் வந்தவுடன் உறுதி அனுமதி பெற்று பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வதாக முற்றுகை போராட்டம் நடத்திய மக்களிடம் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து அந்த மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story