விருதுநகரில் இயற்கை தற்சார்பு வாழ்க்கை மரபு கண்காட்சி
விருதுநகரில் இயற்கை தற்சார்பு வாழ்க்கை மரபு கண்காட்சி நடந்தது.
விருதுநகர்,
இயற்கை விவசாயத்தை பெருக்கிடவும் முன்னோர்கள் பின்பற்றிய தற்சார்பு வாழ்க்கை முறையின் அவசியத்தை உணர்த்துவதற்காக விருதுநகரில் தனியார் அறக்கட்டளை சார்பில் இயற்கை தற்சார்பு வாழ்க்கை மரபு கண்காட்சி நடத்தப்பட்டது. கண்காட்சியில் நாட்டு மாடுகள், காளைகள், நாய் உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகள் இடம் பெற்றிருந்தன.
நாட்டு மாடுகளின் சாணங்களில் இருந்து அழகுசாதன பொருட்கள் செய்து அதனை காட்சிப்படுத்தியிருந்தனர். கண்காட்சியில் சமூக ஆர்வலர்கள், இயற்கை விவசாயம், நிலத்தடிநீரை மேம்படுத்துதல், பாலிதீன் பயன்பாட்டின் பாதிப்புகள், பனைமரம் வளர்ப்பு மற்றும் பனைமர பொருட்கள் பயன்பாடு, ரசாயனமற்ற உரங்கள், இயற்கை பூச்சுக்கொல்லிகள், குடும்ப ஆரோக்கியத்திற்கு நஞ்சில்லா உணவுகள், இயற்கை வேளாண் பொருட்கள் மதிப்புக்கூட்டல் மற்றும் சந்தைப்படுத்துதல், மூலிகைகளை கொண்டு உடல் பிரச்சினைகளை சரிசெய்தல், இயற்கை உணவு நடைமுறை சாத்தியமா என பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
கண்காட்சியில் சிறுவர்–சிறுமிகள் தங்கள் கைகளால் மண்பாண்டம் செய்ய பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஆர்வத்துடன் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு மண்பாண்டங்களை செய்து அதை வீட்டிற்கு எடுத்துச்சென்றனர். மேலும் மண் பானைகள், அடுப்புகள், ஜாடிகள், டம்ளர் உள்ளிட்ட சமையல் பொருட்கள், நாட்டுப்பசும்பால் பொருட்கள், மரச்செக்கு எண்ணெய், மாடித்தோட்டப்பொருட்கள், மரவிளையாட்டு சாமான்கள், இயற்கை விளைபொருட்கள், பருத்தி துணிப்பைகள், புத்தகங்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.
பார்வையாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மாட்டுவண்டி சவாரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைவரும் சவாரி செய்து மகிழ்ந்தனர்.
பட்டம் செய்து பறக்கவிடுதல், ஓவியப்போட்டி, மற்றும் சமையல் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் கலந்து கொண்டவர்கள் தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் அறிந்து கொண்டதாகவும் ஒரு கிராமத்திற்குள் சென்று வந்த உணர்வு இருந்ததாகவும் தங்கள் குழந்தைகள் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் கண்காட்சியை கண்டுகளித்ததாகவும் கூறினர்.