மனவளர்ச்சி குன்றிய சிறுமியை கற்பழிப்பு: வாலிபருக்கு 29 ஆண்டு சிறை
மனவளர்ச்சி குன்றிய சிறுமியை கற்பழித்த வாலிபருக்கு 29 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு கூறியது.
கடலூர்,
இந்த தீர்ப்பு பற்றிய விவரம் வருமாறு:-
கடலூர் அருகே உள்ள பெரிய காட்டுப்பாளையம் மாரியம்மன்கோவில் தெருவைச்சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய ஒரு சிறுமி(வயது 16) கடலூரில் உள்ள சிறப்பு பள்ளியில் படித்து வந்தாள். கடந்த 17-6-2017 அன்று விடுமுறை என்பதால் மாணவி பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் தனியாக இருந்தாள். அன்றைய தினம் அவளுடைய பெற்றோர் கூலி வேலைக்கு சென்று இருந்தனர்.
அவர்களுக்கு பெரியகாட்டுப்பாளையம் அம்பேத்கர் நகரில் புதிதாக வீடு கட்டப்பட்டு வந்ததால், அந்த வீட்டை பார்ப்பதற்காக சிறுமி அம்பேத்கர் நகருக்கு சென்றாள்.
அவள் தனியாக சென்றதை பார்த்த பெரியகாட்டுப்பாளையம் சிவனார்புரத்தை சேர்ந்த ஆதிமூலம் மகன் பாரதிதாசன்(27) என்பவர் சிறுமியை பின்தொடர்ந்து சென்றார். அம்பேத்கர் நகரில் உள்ள புதிய வீட்டுக்குள் சென்றதும், அவளை பின்தொடர்ந்த பாரதிதாசனும் உள்ளே சென்று சிறுமியை வலுக்கட்டாயமாக பிடித்து கற்பழித்தார்.
இதற்கிடையே தனியாக இருந்த மகளை பார்த்து வருவதற்காக அவளுடைய தந்தை மாரியம்மன்கோவில் தெருவில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். அங்கே அவளை காணாததால், அம்பேத்கர் நகரில் உள்ள வீட்டுக்கு தேடிச்சென்றார். அங்கு அவருடைய மகளை பாரதிதாசன் கற்பழித்து கொண்டிருந்தார். இதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். அவரை பார்த்ததும், பாரதிதாசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இந்த சம்பவம் பற்றி அவர் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாரதிதாசனை கைது செய்தனர். இந்த வழக்கு கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று நீதிபதி லிங்கேஸ்வரன் தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், குற்றம் சாட்டப்பட்ட பாரதிதாசனுக்கு போக்சோ சட்டம்-6, பிரிவு 5 கே-யின் கீழ்(18 வயதுக்கு குறைந்த மனவளர்ச்சி குன்றிய சிறுமியை கற்பழித்த குற்றம்) 29 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். மேலும் இந்த அபராத தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். இவ்வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் க.செல்வபிரியா ஆஜரானார்.
இந்த வழக்கில் சம்பவம் நடந்த 14 மாதங்களுக்குள் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதில் சிறப்பாக புலன்விசாரணை செய்து விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பாராட்டினார்.
Related Tags :
Next Story