இருளர் வன உரிமைக்குழுவிற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் வருவாய் அதிகாரியிடம் மனு


இருளர் வன உரிமைக்குழுவிற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் வருவாய் அதிகாரியிடம் மனு
x
தினத்தந்தி 14 Aug 2018 4:15 AM IST (Updated: 14 Aug 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

இருளர் வன உரிமைக்குழுவிற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று மாவட்ட வருவாய் அதிகாரியிடம் உரிமை குழுவினர் மனு அளித்தனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அதிகாரி தனசேகரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலை வாய்ப்பு, வீட்டுமனை பட்டா, திருமண உதவி திட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 271 மனுக்களை மாவட்ட வருவாய் அதிகாரியிடம் நேரடியாக அளித்தனர்.

பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்து குறித்த காலத்திற்குள் மனுக்களின் மீது தக்க நடவடிக்கை மேற்கொண்டு, மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார்.

குவாகம் இருளர் வன உரிமைக்குழுவினர் திரண்டு வந்து வருவாய் அதிகாரியிடம் மனு அளித்தனர். அதில், அரியலூர் மாவட்டம், குவாகம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பழங்குடியினரை சேர்ந்த 70 குடும்பங்கள் வசித்து வருகின்றோம். எங்களது ஊரில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் கொங்கனர் வனத்தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் நாங்கள் தேன் எடுத்தல், கிழங்கு தோண்டுதல், எலி பிடித்தல், விறகு எடுத்தல், ஆடு, மாடு மேய்த்தல் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகிறோம். இதில் கிடைக்கும் வருமானம் தான் எங்களது வாழ்வாதாரம். எங்களது பொருளாதார மேம்பாட்டு மற்றும் ஊர் மக்களுக்கு அடிப்படை கிடைத்திட கடந்த 2017-ம் ஆண்டு குவாகம் இருளர் வன உரிமைக்குழு தொடங்கப்பட்டு, தொடர்ந்து எங்களது மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வருகிறோம். எனவே எங்களது குழுவிற்கு அங்கீகாரம் அளிக்குமாறு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற குடியரசு தின கிராம சபை கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றுமாறு மனு அளித்தோம். ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறோம். அங்கீகாரம் அளிக்காததால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே மாவட்ட கலெக்டர் வருகிற 15-ந் தேதி நடைபெறும் சுதந்திரதின கிராம சபை கூட்டத்திலாவது எங்கள் குழுவிற்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் வரிசையில் காத்திருக்காமல் அவர்களுக்கான தனி இருக்கையில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலருக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story