காற்றாலை மின்சார உற்பத்தி உச்சக்கட்டத்தை எட்டியது
தேனி மாவட்டத்தில் காற்றின் வேகம் வினாடிக்கு 14 மீட்டராக அதிகரித்துள்ள நிலையில் காற்றாலைகளில் மின்சார உற்பத்தி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
ஆண்டிப்பட்டி,
தேனி மாவட்டத்தில் ஆண்டிப்பட்டி, கண்டமனூர், மரிக்குண்டு, காமாட்சிபுரம், சீப்பாலக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட காற்றாலைகள் செயல்பட்டு வருகிறது. காற்றின் வேகத்தை பொறுத்து காற்றாலையில் நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 38 ஆயிரம் யூனிட் வரையில் மின்சாரம் உற்பத்தி செய்யமுடியும்.
கடந்த ஜூன் மாதம் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து தேனி மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரித்தது. இதனால் காற்றாலைகளில் மின்சார உற்பத்தி தொடங்கியது. கடந்த சில நாட்களாக சராசரியாக காற்றாலையில் நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் யூனிட் வரையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் தேனி மாவட்டத்தில் வீசிவந்த காற்றின் வேகம் வினாடிக்கு 14 மீட்டர் என்ற அளவில் அதிகரித்தது. இதனையடுத்து காற்றாலைகளில் மின்சார உற்பத்தி உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றைய நிலவரப்படி ஒரு காற்றாலையின் ஒருநாள் மின்சார உற்பத்தி 38 ஆயிரம் யூனிட்டாக அதிகரித்தது. இதன்மூலம் மாவட்டம் முழுவதும் உள்ள காற்றாலைகள் மூலம் நாள் ஒன்றுக்கு 350 மெகாவாட் வரை மின்சார உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
தேனி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் காற்றாலை மின்சாரம், அந்தந்த பகுதியில் உள்ள துணை மின்நிலையம் மூலம் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
Related Tags :
Next Story