குறைதீர்க்கும் கூட்டம்: குடிநீர் கேட்டு கலெக்டரிடம் கிராம மக்கள் மனு


குறைதீர்க்கும் கூட்டம்: குடிநீர் கேட்டு கலெக்டரிடம் கிராம மக்கள் மனு
x
தினத்தந்தி 13 Aug 2018 9:45 PM GMT (Updated: 13 Aug 2018 9:08 PM GMT)

குடிநீர் கேட்டு குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்,


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள், தங்களுடைய கோரிக்கைகள் குறித்து மனு கொடுத்தனர்.

அப்போது ஒட்டன்சத்திரம் தாலுகா ரெட்டியப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வசதி கேட்டு மனு கொடுத்தனர். அந்த மனுவில், ரெட்டியப்பட்டியில் 4 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. அதில் தண்ணீர் இருந்தும் அதிக ஆழத்துக்கு குழாய் அமைக்கவில்லை. இதனால் குடிநீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. குடிநீருக்காக பிற பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, அதிக ஆழத்துக்கு குழாய் அமைத்து குடிநீர் வழங்க வேண்டும். மேலும் அனைத்து தெருக்களிலும் தெருவிளக்கு அமைக்க வேண்டும். இதுகுறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மறியல் செய்வோம், என்று கூறப்பட்டு இருந்தது.

நிலக்கோட்டை தாலுகா சேவுகம்பட்டி பேரூராட்சியை சேர்ந்தவர்கள் கொடுத்த மனுவில், சேவுகம்பட்டி பேரூராட்சியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்கு, மருதாநதி அணையின் ஆற்றுப்படுகையில் திறந்தவெளி கிணறு வெட்டப்பட்டுள்ளது. ஆனால், பணிகள் முடிந்து 45 நாட்கள் ஆகியும், இதுவரை அந்த கிணற்றில் இருந்து குடிநீர் எடுத்து வினியோகம் செய்யப்படவில்லை.
இதற்கிடையே அந்த கிணற்றை அய்யம்பாளையம் பேரூராட்சிக்கு சொந்தமாக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தியுள்ளனர். இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, புதிய கிணற்றில் இருந்து சேவுகம்பட்டிக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டுள்ளது.

பழனி அருகேயுள்ள சுக்கமநாயக்கன்பட்டியை சேர்ந்த தேவராஜன் கொடுத்த மனுவில், நான் 20 ஏக்கர் நிலத்தில் மா, தென்னை, கொய்யா மற்றும் பயிர்கள் சாகுபடி செய்து இருந்தேன். தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பயிர்கள் நாசமாகி விட்டன. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதேபகுதியை சேர்ந்த எல்லம்மாள் கொடுத்த மனுவில், எனக்கு சொந்தமான 5 ஏக்கர் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டு இருந்த அனைத்து பயிர்களும் தீ விபத்தில் நாசமாகி விட்டன. இதற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

வடமதுரை சிங்காரக்கோட்டையை சேர்ந்த விவசாயி சின்னக்கண்ணு கொடுத்த மனுவில், எனக்கு வறட்சி நிவாரணமாக வழங்கப்பட்ட ரூ.1,334-க்கான காசோலையை வங்கிக்கு கொண்டு சென்றேன். ஆனால், தேதியை மாற்றி வாங்கி வரும்படி வங்கி அதிகாரிகள் கூறினர்.
அதன்படி காசோலையில் தேதியை மாற்ற கிராம நிர்வாக அலுவலகத்துக்கு சென்றேன். ஆனால், சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மாறி சென்று விட்டதால், இதுவரை எனக்கு காசோலை கிடைக்கவில்லை. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

மக்கள்நீதி மய்யம் கட்சியினர் கொடுத்த மனுவில், மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் நாளை (புதன்கிழமை) கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும். அதை முன்கூட்டியே மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். வரவு-செலவு கணக்கு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் மக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும். தீர்மான நகல் கேட்டால் தாமதமின்றி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. 

Next Story