கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்த குவியும் தி.மு.க. தொண்டர்கள் நடிகர் விஜய் அஞ்சலி


கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்த குவியும் தி.மு.க. தொண்டர்கள் நடிகர் விஜய் அஞ்சலி
x
தினத்தந்தி 14 Aug 2018 4:45 AM IST (Updated: 14 Aug 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்த தி.மு.க. தொண்டர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.

சென்னை, 

அமெரிக்காவில் இருந்து நேற்று அதிகாலை சென்னை திரும்பிய நடிகர் விஜய், கருணாநிதி சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட வளாகத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி சமாதி அமைந்துள்ளது. கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்த தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் என உள்ளூர், வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து என ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர்.

அவர்கள் சமாதியில் மலர்களை தூவியும், மலர் வளையம் வைத்தும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதுதவிர அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள், அரசு சாரா அமைப்புகள், சங்கங்கள் உள்ளிட்டவற்றை சேர்ந்த பிரதிநிதிகளும், நிர்வாகிகளும் கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

‘சர்கார்’ படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு, அமெரிக்காவில் இருந்து நடிகர் விஜய் நேற்று அதிகாலை 4 மணிக்கு விமானம் மூலம் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு நேராக கருணாநிதி சமாதிக்கு வந்து மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செயலாளர் நாராயணா, மாநில செயலாளர் இரா.முத்தரசன் உள்பட நிர்வாகிகள் கருணாநிதி சாமதியில் நேற்று அஞ்சலி செலுத்தினார்கள்.

அதேபோல், மலேசியா நாட்டு சட்டமன்ற துணை சபாநாயகர் ரவி தலைமையில் பலர் கருணாநிதி சமாதியில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். முன்னதாக, சென்னை கோபாலபுரம் இல்லத்துக்கு நேரில் சென்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் துக்கம் விசாரித்துவிட்டு வந்தனர்.

நேற்று காலையில் இருந்து காஞ்சீபுரம் வடக்கு மாவட்டம், திருவண்ணாமலை, திருவள்ளூர், தியாகராயநகர் பகுதி, அண்ணாநகர் பகுதி, திருவொற்றியூர் பகுதி என பல்வேறு மாவட்டங்களில் இருந்து தி.மு.க. தொண்டர்கள் குவியத்தொடங்கினார்கள். அவர்களும் நீண்ட வரிசையில் வெயிலில் காத்துக்கிடந்து கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்தினார்கள்.

மின்வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவையை சேர்ந்தவர்கள் பேரணியாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள். முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி, தமிழ்நாடு திரைப்பட பாடலாசிரியர்கள் சங்கத்தை சேர்ந்த பிரதிநிதிகள், நடிகர் சங்கிலி முருகன், திராவிடர் கழக உறுப்பினர் தர்மலிங்கம், நாதஸ்வர கலைஞர்கள், ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரி மாணவர்கள், எஸ்.ஆர்.இ.எஸ். ரெயில்வே தொழிற்சங்கத்தினர், தமிழ்நாடு ஆசிரியர் சங்க தலைவர் பி.கே.இளமாறன் தலைமையில் 60 ஆசிரியர்கள் உள்பட பலரும் நேற்று கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்தினர்.

Next Story