விவாகரத்து கோரிய தம்பதியை சேர்த்து வைத்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி


விவாகரத்து கோரிய தம்பதியை சேர்த்து வைத்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி
x
தினத்தந்தி 14 Aug 2018 3:02 AM IST (Updated: 14 Aug 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

உப்பள்ளியில் விவாகரத்து கோரிய தம்பதியை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சேர்த்து வைத்தார்.

பெங்களூரு,

தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் திம்மாசாகர் சாலையில் ரூ.122 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கூடிய தாலுகா கோர்ட்டு கட்டிடம் கட்டப்பட்டது. இந்த புதிய கோர்ட்டு கட்டிடத்தை நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா திறந்து வைத்தார்.

பின்னர், புதிய கோர்ட்டு கட்டிடத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் சிறப்பு லோக் அதாலத்(மக்கள் நீதிமன்றம்) நடந்தது. இந்த சிறப்பு லோக் அதாலத்தில் ஜெகதீஷ்(வயது 41), பார்வதி(38) தம்பதியின் விவாகரத்து வழக்கை தலைமை நீதிபதி தீபஸ் மிஸ்ரா விசாரித்தார். அப்போது ஜெகதீஷ்-பார்வதி தம்பதி தங்களின் 2 மகன்கள், 2 மகள்களுடன் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்பு ஆஜரானார்கள்.

இந்த வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தம்பதிக்கு அறிவுரை வழங்கினார். அதாவது, ‘குடும்பம் எனும் அமைப்பு பலவீனமாக இருந்தால் அது சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். நீங்கள் பிரிந்து செல்வதை விட உங்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சேர்ந்து வாழ வேண்டும். உங்களின் குழந்தைகளுக்கும், எதிர்கால தலைமுறையினருக்கும் முன்உதாரணமாக திகழ வேண்டும். அனைத்து தரப்பிலும் எதிர்பார்ப்புகளை குறைத்து கொண்டு தினமும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும்‘ என்றார். மேலும், விவாகரத்து பெற்றால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் தீபக் மிஸ்ரா தம்பதியிடம் எடுத்து கூறினார்.

இந்த அறிவுரைகளை கேட்ட ஜெகதீஷ்-பார்வதி தம்பதி தங்களின் விவாகரத்து வழக்கை வாபஸ் பெறுவதாக கூறி ஒன்றாக சேர்ந்து வாழ்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தம்பதி மற்றும் தம்பதியின் 2 மகன்கள், 2 மகள்கள், குடும்பத்தினருக்கு இனிப்புகள் வழங்கினார். அத்துடன் பெற்றோரை சேர்த்து வைத்ததற்காக, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு ஜெகதீஷ்-பார்வதியின் மகன்கள், மகள்கள் இனிப்புகள் வழங்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Next Story