கடந்த 2009–ம் ஆண்டில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டி தர வேண்டும், கலெக்டரிடம் கோரிக்கை மனு
கடந்த 2009–ம் ஆண்டில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டி தர வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுத்தனர். அதன்படி ஊட்டி அருகே கேத்தி பிரகாசபுரத்தில் வசித்து வரும் பொதுமக்கள் வீடுகள் கட்டி தரக்கோரி மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2009–ம் ஆண்டில் புயல் மழையால் நிலச்சரிவு ஏற்பட்டதில் பலரது வீடுகள் தரைமட்டமானது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் வகையில் கேத்தி பிரகாசபுரத்தில் 50 வீடுகள் தற்காலிகமாக அரசு மூலம் ஒதுக்கப்பட்டது. புயல் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அதே பகுதியில் புதியதாக குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. அதில் 35 பேர் குறித்த பட்டியல் சேர்க்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள 15 பேரின் பெயர் விவரங்கள் இணைக்கப்பட வில்லை. வீடுகளை இழந்த அனைவருக்கும் வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
நெல்லியாளம் நகராட்சியில் ஒப்பந்த முறையில் பணியாற்றும் சுகாதார பணியாளர்கள் ரேஷன் கார்டு, ஆதார் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கொடுத்த மனுவில், நெல்லியாளம் நகராட்சி ஒப்பந்ததாரர் எங்களை பணியில் இருந்து எந்த நாட்களிலும் நீக்க வேண்டிய சூழ்நிலை உள்ளதாக கடந்த 1–ந் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். கடந்த பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் நாங்கள் இந்த வருமானத்தை கொண்டு தான் குடும்பம் நடத்தி வந்தோம். மேற்கண்ட அறிவிப்பால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். ஆகவே நகராட்சியில் சுகாதார பணிக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும். இல்லையென்றால் அரசு சான்றிதழ்களை நாங்கள் கலெக்டர் அலுவலகத்தில் திரும்ப ஒப்படைப்போம் என்று கூறப்பட்டு இருந்தது.