தேசிய வங்கிகளில் கர்நாடக விவசாயிகள் வாங்கிய ரூ.2 லட்சம் கடன் தள்ளுபடி


தேசிய வங்கிகளில் கர்நாடக விவசாயிகள் வாங்கிய ரூ.2 லட்சம் கடன் தள்ளுபடி
x
தினத்தந்தி 14 Aug 2018 3:30 AM IST (Updated: 14 Aug 2018 3:30 AM IST)
t-max-icont-min-icon

தேசிய வங்கிகளில் கர்நாடக விவசாயிகள் வாங்கிய ரூ.2 லட்சம் வரையிலான கடனை தள்ளுபடி செய்வது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்று முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

ஹாசன்,

ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புரா தாலுகாவில் உள்ளது அரதனஹள்ளி கிராமம். இந்த கிராமம் முதல்-மந்திரி குமாரசாமியின் சொந்த ஊராகும். இந்த நிலையில் நேற்று அரதனஹள்ளி கிராமத்திற்கு முதல்-மந்திரி குமாரசாமி, தனது மனைவி அனிதா, தந்தை தேவேகவுடா, தாய் சென்னம்மா, சகோதரரும், மந்திரியுமான எச்.டி.ரேவண்ணா ஆகியோருடன் வந்தார். அங்கு குலதெய்வ கோவிலான பெட்ட ரங்கநாத சாமி கோவிலில் குமாரசாமி குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் அவர் கலந்து கொண்டார்.

இதையடுத்து உள்ளாட்சி தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பி பாரத்தை வைத்து கோவிலில் குமாரசாமி பூஜை செய்தார். இதன்பின்னர் குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் வெற்றி பெறுவார்கள். தேசிய வங்கிகளில் கர்நாடக விவசாயிகள் வாங்கிய ரூ.2 லட்சம் வரையிலான கடனை தள்ளுபடி செய்வது குறித்து நான் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளேன். கூடிய விரைவில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும்.

விவசாயிகள் வாழ்க்கையை மேம்படுத்த நான் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறேன். மாநிலத்தில் தற்போது கனமழை பெய்து வருகிறது. வருகிற 30-ந் தேதி முதல் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற உள்ளேன். கூட்டணி அரசு சுயநினைவு இல்லாமல் செயல்படுவதாக பா.ஜனதாவினர் கூறி வருகின்றனர். கூட்டணி அரசை பற்றி குறை கூறுவதை முதலில் அவர்கள் நிறுத்தி கொள்ள வேண்டும்.

மண்டியா, ஹாசன், ராமநகர் மாவட்டங்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து மாவட்ட வளர்ச்சிகளுக்கும் நான் முன்னுரிமை கொடுத்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story