தேசிய ஊரக உறுதி திட்டத்தில் தொடர்ந்து வேலை கிராம மக்கள் கோரிக்கை


தேசிய ஊரக உறுதி திட்டத்தில் தொடர்ந்து வேலை  கிராம மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 13 Aug 2018 10:03 PM GMT (Updated: 13 Aug 2018 10:03 PM GMT)

தேசிய ஊரக உறுதி திட்டத்தில் தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் ஷில்பாவிடம், கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

நெல்லை, 


நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினார். மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களை வைத்து உட்கார்ந்து இருந்தனர். அவர்கள் இருக்கும் இடத்துக்கு சென்று கலெக்டர் கோரிக்கை மனுக்களை வாங்கினார். அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.

பாளையங்கோட்டையை அடுத்த மருதூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், “எங்கள் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் முறையாக வேலை வழங்கப்பட வில்லை. 5 மாதங்களாக வேலை இல்லாமல் தவிக்கிறோம். எங்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வேண்டும். வேலை வழங்காமல் முறைகேடு செய்த பஞ்சாயத்து ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் பேட்டை கிளை பொருளாளர் கோதர் மைதீன் தலைமையில், அந்த கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், நெல்லை மாநகராட்சி 48-வது வார்டு ராஜீவ்காந்தி நகர் பகுதியில் சாலை அமைக்க வேண்டும். கழிவுநீர் ஓடை அமைக்க வேண்டும். அந்த பகுதியில் பூங்கா அமைக்க வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன் தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில், “நெல்லை தாலுகா சேந்திமங்கலம், பாலாமடை, குறிச்சிகுளம் ஆகிய கிராமத்தை சுற்றியுள்ள குளங்களில் மராமத்து பணி நடைபெற்று வருகிறது. இதனால் குளங்களில் தண்ணீர் சேமித்து வைக்க முடியவில்லை. விரைவில் மராமத்து பணிகளை முடிக்க வேண்டும். மேலும் சுற்று வட்டார பகுதியில் உள்ள 10 கிராமங்களில் முறையாக மராமத்து பணிகள் நடைபெறவில்லை. இதனால் மதகுகள் பழுதடைந்துள்ளது. பாசன கால்வாய்களில் முட்செடிகள் வளர்ந்து உள்ளன. மதகுகளை சீரமைத்து, முட்செடிகளை அகற்ற வேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.

நெல்லை டவுனை சேர்ந்த காவல்துறை வாரிசுகள் சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில், “மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்படி இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வில் வாரிசுதாரர்களுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்வில் காவலர்களின் வாரிசுதாரர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. ஜெயலலிதா உத்தரவின் அடிப்படையில் எங்களுக்கு தொடர்ந்து இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டிருந்தது.

வாள் சண்டையில் தேசிய பதக்கம் பெற்ற வெள்ளத்தாய், அபிராபி ஆகியோர் சமூக ஆர்வலர்கள் பீட்டர், பாரதி முருகன் ஆகியோருடன் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், தேசிய அளவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற எங்களுக்கு சுதந்திர தினவிழாவில் பாராட்டி சான்றிதழ் வழங்கி கவுரவப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மானூர் அருகே உள்ள பள்ளமடை கிராம மக்கள் கொடுத்த மனுவில், எங்கள் ஊருக்கு வந்த அரசு டவுன் பஸ்சின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அவதிப்படுகிறார்கள். எனவே முன்பு இயக்கப்பட்ட நேரத்திலேயே பஸ்சை இயக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டையை அடுத்து நொச்சிகுளத்தை சேர்ந்த பேச்சியம்மாள், வெயிலாச்சி, சுசீலா, கலா ஆகியோர் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில், “எங்கள் பகுதியை சேர்ந்த 2 பெண்கள் தனியார் நிதி நிறுவனத்துக்கு பணம் வசூல் செய்தார்கள். அதில் ஏராளமானவர்கள் பணம் கட்டினார்கள். தற்போது அந்த நிதி நிறுவனத்தை மூடி விட்டனர். எங்கள் பணத்தை மோசடி செய்து விட்டனர். எங்கள் பணம் திரும்ப கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது. 

Next Story