பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும்
பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என பொதுமக்களுக்கு கலெக்டர் ஷில்பா அறிவுரை வழங்கினார்.
நெல்லை,
பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என அரசு முயற்சி செய்து வருகிறது. அதற்கான விழிப்புணர்வு பிரசாரம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு ஊர்களில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்ட மகளிர் திட்டத்தின் கீழ் 6 ஆயிரத்து 826 சுய உதவிக்குழுக்கள் உள்ளன. இந்த சுய உதவிக்குழுக்கள் மூலம் துணிப்பை தயார் செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 5 ரூபாய் முதல் 40 ரூபாய் வரையிலான துணிப்பைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் 19 பஞ்சாயத்து யூனியன்கள் உள்ளன. ஒரு யூனியனுக்கு ஒரு இடத்தில் துணிப்பைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மகளிர் சுய உதவிக்குழுக்களின் துணிப்பைகள் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தன. இந்த விற்பனையை, கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்.
அப்போது மனு கொடுக்க வந்த பொதுமக்கள் சிலர் பிளாஸ்டிக் பைகளை வைத்து இருந்தனர். அந்த பிளாஸ்டிக் பைகளை வாங்கி கொண்டு, தனது சொந்த செலவில் துணிப்பைகளை வாங்கி பொதுமக்களிடம் வழங்கினார். அப்போது கலெக்டர் ஷல்பா, “பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும்“ என்று கூறினார்.
மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மகளிர் திட்ட இயக்குனர் மைக்கேல் அந்தோணி, நெல்லை உதவி கலெக்டர் மைதிலி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story