வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி


வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி
x
தினத்தந்தி 14 Aug 2018 4:22 AM IST (Updated: 14 Aug 2018 4:22 AM IST)
t-max-icont-min-icon

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த 4 பேரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

சேலம்,

சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தங்கும் விடுதியில் 4 பேர் தங்கி இருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு 50-க்கும் மேற்பட்ட வாலிபர்கள் அங்கு சென்று அவர்களை சுற்றி நின்று கொண்டு விசாரிப்பதாகவும், அசம்பாவித சம்பவம் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும், பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர்.

அப்போது அங்கு திரண்டு வந்தவர்கள் போலீசாரிடம் கூறியதாவது:- இந்த விடுதியில் தங்கியிருந்த 4 பேரும், சேலம், ஓசூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலரிடம் வெளி நாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி கடந்த 8 மாதத்திற்கு முன்பு பலரிடம் பல லட்சம் பணம் பெற்றுக்கொண்டனர். ஆனால் வேலை வாங்கி தரவில்லை. இந்த நிலையில் வெளி நாட்டிற்கு அனுப்புவதற்காக அனைவருக்கும் விசா வழங்கப்படும். எனவே பணம் கொடுத்தவர்களை இந்த விடுதிக்கு வரச்சொன்னார்கள். அதன்படி இங்கு வந்தோம். ஆனால் அவர்கள் விசா வழங்க இன்னும் ஒரு வாரம் ஆகும் என்று கூறினர். வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்து விட்டனர். எனவே எங்களுக்கு வேலை வேண்டாம், கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி கேட்டோம். ஆனால் அவர்கள் பணம் தர மறுக்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதைத்தொடர்ந்து விடுதியில் தங்கி இருந்த 4 பேரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அவர்கள் வாழப்பாடி மற்றும் ஓசூரை சேர்ந்த விஜயகுமார் (வயது30), பிரபாகரன்(32), கார்த்திக்(30), ரமேஷ் (34) என்பது தெரிந்தது.

இந்த நிலையில் 4 பேரிடம் இருந்து பணத்தை பெற்றுத்தரும்படி சிலர் நேற்று இரவு பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதைத்தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் பண மோசடி புகார் தொடர்பாக பிடிபட்ட அந்த 4 பேரும், மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story