சின்னவீராம்பட்டினம் கடல் அலையில் சிக்கிய விமானப்படை அதிகாரி மீட்பு


சின்னவீராம்பட்டினம் கடல் அலையில் சிக்கிய விமானப்படை அதிகாரி மீட்பு
x
தினத்தந்தி 14 Aug 2018 5:00 AM IST (Updated: 14 Aug 2018 4:56 AM IST)
t-max-icont-min-icon

சின்னவீராம்பட்டினத்தில் கடல் அலையில் சிக்கிய விமானப்படை அதிகாரியை உயிர் காப்பாளர்கள் மீட்டனர்.

அரியாங்குப்பம்,

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சுகார் மேத் பாண்டே (வயது 35). சென்னை ஆவடியில் உள்ள விமான படையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர், தனது நண்பர்கள் சிலருடன் நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்திருந்தார். இவர்கள் அரியாங்குப்பத்தை அடுத்துள்ள சின்ன வீராம்பட்டினத்துக்கு சென்று கடலில் இறங்கி ஆனந்தமாக குளித்தனர்.

அப்போது கடலில் எழுந்த ராட்சத அலையில் சிக்கிக்கொண்ட சுகார் மேத் பாண்டே கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார். இதை பார்த்த அவரது நண்பர்கள், கூச்சலிட்டனர். உடனே அங்கிருந்த உயிர் காப்பாளர்கள், கடலில் குதித்து சுகார் மேத் பாண்டேவை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மேலும் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, காப்பாற்றினர்.

கடலில் உயிருக்கு போராடியவரை காப்பாற்றிய உயிர் காப்பாளர்கள் வீராம்பட்டினத்தை சேர்ந்த அனஸ்ட்ராஜ், தினேஷ், இந்திரன் கார்த்தி மற்றும் சின்னவீராம்பட்டினம் இளநீர் வியாபாரி கருணாகரன் ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு அப்துல்ரகீம் தனது அலுவலகத்துக்கு வரவழைத்து பாராட்டினார். இந்நிகழ்ச்சியின்போது அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்–இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story