வேலூரில் சிறப்பு ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி 133 பேர் பங்கேற்பு


வேலூரில் சிறப்பு ஆசிரியர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி 133 பேர் பங்கேற்பு
x
தினத்தந்தி 14 Aug 2018 12:01 AM GMT (Updated: 14 Aug 2018 12:01 AM GMT)

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடந்த தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் 133 பேரின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.

வேலூர்,

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள தையல், ஓவியம், உடற்கல்வி, இசை ஆகிய 4 பிரிவுகளில் பணிபுரிய சிறப்பு ஆசிரியர்களுக்கு கடந்தாண்டு தகுதித் தேர்வு நடந்தது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்பட்ட இத்தேர்வை மாநிலம் முழுவதும் இருந்து 25 ஆயிரத்து 781 பேர் எழுதினர். அதன் முடிவுகள் கடந்த மாதம் 27-ந் தேதி வெளியானது. வேலூர் மாவட்டத்தில் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கும் பணி வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி கல்வித்துறை இடைநிலை கல்வி இணை இயக்குனர் ஸ்ரீதேவி தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் முன்னிலை வகித்தார்.

இதில், மாவட்ட கல்வி அலுவலர்கள் அருளரசு (பொறுப்பு), குணசேகரன், மணிவண்ணன், வீரமணி, சாம்பசிவம் ஆகியோர் கலந்து கொண்டு தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் சான்றிதழ்களை சரிபார்த்தனர். இதில், மாவட்டம் முழுவதும் இருந்து 133 பேர் கலந்து கொண்டனர். அவர்களது சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன.

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும், தகுதித் தேர்வு மதிப்பெண் மற்றும் இடஒதுக்கீடு அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. பட்டியலின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி, பணி நியமன ஆணை வழங்கப்படும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story