திருப்பத்தூர் அருகே 3 குழந்தைகளுக்கு சாப்பாட்டில் விஷம் கலந்துகொடுத்து தந்தையும் தற்கொலைக்கு முயற்சி


திருப்பத்தூர் அருகே 3 குழந்தைகளுக்கு சாப்பாட்டில் விஷம் கலந்துகொடுத்து தந்தையும் தற்கொலைக்கு முயற்சி
x
தினத்தந்தி 14 Aug 2018 5:34 AM IST (Updated: 14 Aug 2018 5:34 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே 3 குழந்தைகளுக்கு சாப்பாட்டில் விஷம் கலந்துகொடுத்து தந்தையும் தற்கொலைக்கு முயன்றார்.

திருப்பத்தூர்,

வேலூர் மாவட்டம், கந்திலி அருகே உள்ள மாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் காவேரி (வயது 37), தொழிலாளி. இவரது மனைவி லிங்கம்மாள். இவர்களுக்கு நேத்ரா (10), பவித்ரா (7) என 2 மகள்களும், அகிலன் (4) என்ற மகனும் உள்ளனர். அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நேத்ரா 5-ம் வகுப்பும், பவித்ரா 3-ம் வகுப்பும், அகிலன் எல்.கே.ஜி.யும் படித்து வருகின்றனர்.

காவேரி தினமும் மது குடித்துவிட்டு சரிவர வேலைக்கு செல்லாமல் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிக அளவில் கடன் தொல்லை ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மதியம் தனது குழந்தைகள் 3 பேரையும் பள்ளியில் இருந்து காவேரி வீட்டிற்கு அழைத்து வந்தார்.

பின்னர் அவர்களுக்கு கடையில் இருந்து வாங்கி வந்த சாப்பாட்டை (குஸ்கா) கொடுத்தார். குழந்தைகளும், காவேரியும் சாப்பிட்டனர். இதனையடுத்து சிறிது நேரத்தில் குழந்தைகளும், காவேரியும் மயங்கிவிட்டனர். இதனை அருகில் இருந்து கவனித்த லிங்கம்மாளுக்கு சந்தேகம் ஏற்படவில்லை. கணவரும், குழந்தைகளும் தூங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள் என நினைத்தார். வெகு நேரம் ஆகியும் அவர்கள் எழுந்திருக்கவில்லை. இதனையடுத்து தட்டி எழுப்பி பார்த்தும், அவர்கள் எழுந்திருக்கவில்லை.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த லிங்கம்மாள் உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கணவரையும், குழந்தைகளையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு இருப்பதாக கூறினர். பின்னர் அங்கிருந்து காவேரி, நேத்ரா, பவித்ரா ஆகிய 3 பேரும் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிறுவன் அகிலனுக்கு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கந்திலி போலீசார் வழக்குப்பதிவு செய்து, எதற்காக காவேரி குழந்தைகளுக்கு விஷம் கலந்த உணவை கொடுத்து தானும் சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சி மேற்கொண்டார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story