கவர்னரும், முதல்–அமைச்சரும் லாவணி பாடுகிறார்கள் - அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
மாநில வளர்ச்சியில் அக்கறை இல்லாமல் கவர்னர் கிரண்பெடியும், முதல்–அமைச்சர் நாராயணசாமியும் ஒருவருக்கொருவர் லாவணி பாடி வருகிறார்கள் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி,
அ.தி.மு.க.வின் புதுவை சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஒப்பற்ற அரசியல் கட்சி தலைவர்கள் மறைவினை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்க்காமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்–அமைச்சர் தலைவர்களுக்கு புகழ்சேர்க்கும் வகையில் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும். ஆனால் புதுச்சேரி முதல்–அமைச்சர் குறுகிய கண்ணோட்டத்தோடு அரசியல் ரீதியாக செயல்படுகிறார்.
கருணாநிதியின் மறைவினை தொடர்ந்து அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக முதல்–அமைச்சர் நாராயணசாமி வெளியிட்ட அறிவிப்புகள் அனைத்தும் அரசியல் ரீதியிலானதாக உள்ளன. இது முதல்–அமைச்சரின் செயல்பாட்டுக்கு உகந்தது அல்ல.
ஜெயலலிதாவின் மறைவினை தொடர்ந்து அவருக்கு புதுவையில் சிலை அமைக்க கேட்டோம். அதற்கு சுப்ரீம் கோர்ட்டு தடை உள்ளதாக கூறினார். பின்னர் இதுதொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பி அனுமதி பெற்று வைப்பதாக கூறினார்.
ஆனால் கருணாநிதியின் மறைவினை தொடர்ந்து தி.மு.க.வினர் கோரிக்கை வைக்காமலேயே அறிவிப்புகளை வெளியிட்டார். கருணாநிதிக்கு சிலை வைக்கக்கூடாது என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படக்கூடாது என்று கூறுகிறோம். இவரது தகாத செயல்பாடுகள் குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு கடிதம் எழுதுவோம்.
கவர்னர் தொடர்பான விஷயங்களில் முதல்–அமைச்சர் நாராயணசாமி வெற்று அறிக்கைகளை விடுவதை நிறுத்திவிட்டு சட்டரீதியாக சந்திக்க வேண்டும். அமைச்சரவைக்கு அதிகாரம், அமைச்சரவையின் ஆலோசனைப்படிதான் கவர்னர் செயல்படவேண்டும், அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடக்கூடாது என்று கூறுவதை விட்டு விட்டு கோர்ட்டுக்கு சென்று உத்தரவு பெற்று வரவேண்டும்.
இதையும் யாரையாவது ஒரு எம்.எல்.ஏ.வை அனுப்பி கோர்ட்டில் வழக்கு தொடராமல் முதல்–அமைச்சராக சென்று வழக்கு தொடர வேண்டும். அங்கு கவர்னருக்கு எதிராக உத்தரவு பெற்று வந்தால் மகிழ்ச்சி.
கவர்னர், முதல்–அமைச்சர் ஆகிய இருவரும் மாநில வளர்ச்சியில் அக்கறை இல்லாமல் ஒருவருக்கொருவர் லாவணி பாடி வருகின்றனர். இதை கேட்டு மக்கள் எரிச்சலடைந்து வருகின்றனர். ஆனால் அதை அவர்கள் இருவரும் புரிந்துகொண்டதாக தெரியவில்லை.
இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.