ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக்கோரி விஷ பாட்டிலுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பெண்


ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக்கோரி விஷ பாட்டிலுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பெண்
x
தினத்தந்தி 14 Aug 2018 5:43 AM IST (Updated: 14 Aug 2018 5:43 AM IST)
t-max-icont-min-icon

நிலத்தை தனி நபர் ஆக்கிரமிப்பு செய்ததால் அதனை மீட்கக்கோரி கலெக்டர் அலுவலகத்துக்கு விஷ பாட்டிலுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறும். அதன்படி நேற்று மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார்.

இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் மற்றும் குறைகள் குறித்து மனுக்கள் அளித்தனர். அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்திற்கு வருபவர்கள் மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை மிரட்டல் விடுப்பதால் அதனை தடுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மனு கொடுக்க வந்தவர்களை நுழைவு வாயிலில் இருந்த போலீசார் சோதனை செய்தபின்னரே அலுவலகத்திற்குள் அனுப்பினர்.

அவ்வாறு போலீசார் சோதனை செய்து கொண்டிருந்தபோது பகல் 11.30 மணிக்கு ஒரு பெண் மனு கொடுக்க வந்தார். அந்த பெண்ணின் கைப்பையை வாங்கி போலீசார் சோதனை செய்தபோது அதில் விஷ பாட்டில் இருந்தது. இதனால் போலீசார் பரபரப்படைந்தனர். பின்னர் அந்த விஷ பாட்டிலை பறிமுதல் செய்த போலீசார் அதிலிருந்த விஷத்தை தரையில் கொட்டி அழித்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தியதில் அப்பெண் கூறியதாவது:-

கல்லரைப்பாடி மஷார் பகுதியை சேர்ந்த எனது பெயர் விஜயலட்சுமி (வயது 55). எனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலம் வீட்டின் அருகே உள்ளது. அதில் சுமார் 7 சென்ட் நிலத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வருகிறார். இது குறித்து அவரிடம் கேட்டால் சரியாக பதில் கூற மறுக்கிறார். எனவே எனது மனு மீது நடவடிக்கை எடுத்து அந்த நிலத்தை மீட்டு என்னிடம் வழங்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிடில் தற்கொலை செய்வதற்காக விஷத்தை பாட்டிலில் எடுத்துக்கொண்டு வந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து போலீசார் அவரை எச்சரித்து கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க அனுப்பி வைத்தனர்.


Next Story