பஸ் மோதி ஓய்வுபெற்ற ரெயில்வே ஊழியர் பலி
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பஸ் மோதி ஓய்வு பெற்ற ரெயில்வே ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மூலைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் பூலையா (வயது 68). இவர் ரெயில்வே ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். நேற்று காலை இவர் மூலைக்கரைப்பட்டியில் இருந்து நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு வந்தார். அங்குள்ள முதலாவது பிளாட்பாரத்தை கடந்து பஸ் நிலையத்தை விட்டு வெளியே செல்வதற்கு நடந்து சென்றார்.
அப்போது திசையன்விளையில் இருந்து புதிய பஸ் நிலையத்திற்கு அரசு பஸ் அந்த வழியாக வந்தது. அந்த பஸ் எதிர்பாராதவிதமாக பூலையா மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பூலையா தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இதுபற்றி தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் மற்றும் நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விரைந்து வந்தனர். பூலையா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே பூலையா உறவினர்களிடம் அவரது இறப்பு குறித்து போலீசார் தகவல் தெரிவித்தனர். அப்போது, பூலையா வங்கி கணக்கில் பணம் போடுவதற்கும், நிலம் பத்திரப்பதிவு செய்வதற்கும் ரூ.2 லட்சம் கொண்டு வந்தது தெரியவந்தது. ஆனால் விபத்து நடந்த இடத்தில் பூலையாவின் கைப்பை மற்றும் பணம் இல்லை. எனவே விபத்து நடந்த போது மர்ம நபர்கள் அதனை திருடி சென்று விட்டார்களா? என்பது தெரியவில்லை. இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் மாயமானது குறித்து துப்பு துலக்குவதற்கு போலீசார் திடீர் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பஸ் நிலைய முதலாவது பிளாட்பாரம் பகுதியில் பஸ்கள் திரும்பி செல்லும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை ஒன்றாக இரும்பு சங்கிலியால் இணைத்து பூட்டு போட்டனர். பின்னர் அந்த மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தவர்களின் விவரங்களை சேகரித்தனர். நீண்ட நேரமாக எடுத்து செல்லப்படாத மோட்டார் சைக்கிள்களின் எண்களை கொண்டும் அதன் உரிமையாளர் விவரங்களை போலீசார் சேகரித்து உள்ளனர்.
மேலும் பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருக்கும் காட்சிகளையும் கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story