உண்டியல்களை உடைத்து பணம் திருட்டு முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்
தாடிக்கொம்பு சவுந்தரராஜபெருமாள் கோவிலில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் 3 உண்டியல்களை தூக்கிச் சென்று, அவற்றை உடைத்து பணத்தை திருடி சென்று விட்டனர்.
தாடிக்கொம்பு,
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவில் பிரசித்தி பெற்ற சவுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தேய்பிறை அஷ்டமி நாளில் விசேஷ பூஜைகள் நடைபெறும். அன்று தமிழகம் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருவது வழக்கம்.
எனவே கோவிலுக்கு வரும் பக்தர் கள் பாதுகாப்பிற்காகவும், கோவிலின் பாதுகாப்பிற்காகவும் பிரகாரங்கள் மற்றும் சுற்றுப்பகுதிகளில் 24 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக 19 உண்டியல்கள் வைக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில் நேற்று காலையில் காவலாளிகள் கோவில் நடையை திறந்து உள்பிரகாரத்தை சுற்றி வந்த போது தன்வந்திரி பெருமாள் சன்னதி, லட்சுமி நரசிம்மர் சன்னதி மற்றும் ஆண்டாள் சன்னதி ஆகிய 3 சன்னதிகளில் வைக்கப்பட்டிருந்த 3 உண்டியல்கள் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்கள் இதுகுறித்து கோவில் குருக்கள் மற்றும் கோவிலின் செயல் அலுவலர் (பொறுப்பு) கணபதி முருகனிடம் தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து செயல் அலுவலர் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில் தாடிக்கொம்பு போலீசார் சவுந்தரராஜபெருமாள் கோவிலுக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதில், கோவில் வெளிப்பிரகாரத்தில் கோவிலின் பழமையான சுற்றுச்சுவரின் பாதுகாப்பிற்காக சாய்வான நிலையில் அமைக்கப்பட்டுள்ள தாங்கு சுவற்றினை பயன்படுத்தி அதன் வழியாக மேலே ஏறி தன்வந்திரி பெருமாள், லட்சுமி நரசிம்மர் மற்றும் ஆண்டாள் ஆகிய சன்னதிகளின் முன்பு வைத்திருந்த 3 உண்டியல்களையும் முகமூடி அணிந்து வந்த 3 கொள்ளையர்கள் தூக்கிச்செல்வது பதிவாகி இருந்தது.
இந்தநிலையில் கோவிலின் அருகே உள்ள குடகனாற்றின் கரைப்பகுதியில் மணல் எடுத்த குழிக்குள் திருடப்பட்ட 3 உண்டியல்களும் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது 3 உண்டியல்களையும் உடைத்து அதில் இருந்த பணம் உள்ளிட்டவற்றை திருடிவிட்டு மர்மநபர்கள் தப்பிச் சென்றது தெரியவந்தது. மேலும் அந்த பகுதியில் வேறு ஒரு கோவிலில் திருடப்பட்ட ஒரு இரும்பு உண்டியல் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது.
தாடிக்கொம்பு சவுந்தரராஜபெருமாள் கோவிலின் உண்டியல் கடந்த 7-ந்தேதிதான் திறக்கப்பட்டு அதில் இருந்த பணம் எடுக்கப்பட்டது. இதனால் திருடப்பட்ட உண்டியல்களில் பெருமளவு பணம் இருந்திருக்க வாய்ப்பில்லை என கோவில் பணியாளர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story