பெண் கைதிகளுக்கு திறந்தவெளி சிறை அமைக்கக்கோரி வழக்கு: மதுரை ஐகோர்ட்டில் விசாரணை ஒத்திவைப்பு
பெண் கைதிகளுக்கு திறந்தவெளி சிறை அமைக்கக்கோரிய வழக்கு விசாரணை மதுரை ஐகோர்ட்டில் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
மதுரை,
மதுரை சட்டக்கல்லூரி 3–ம் ஆண்டு மாணவர் கே.ஆர்.ராஜா, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–
தமிழகத்தில் 9 மத்திய சிறைகள், 3 சிறப்பு பெண்கள் சிறை, 9 மாவட்ட சிறை, 95 சப்–ஜெயில்கள், 3 திறந்தவெளி சிறை, பெண்களுக்கான 3 சப்–ஜெயில்கள், 12 இளஞ்சிறார் சிறைகள் உள்ளன. இவற்றில் 4 ஆயிரத்து 966 தண்டனை கைதிகளும், 9 ஆயிரத்து 156 விசாரணை கைதிகளும் அடைக்கப்பட்டு உள்ளனர்.
ஆண் கைதிகளுக்கு பல்வேறு சிறைகள் இருந்தபோதும், 3 திறந்தவெளி சிறைகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. ஒழுக்கம் மற்றும் நன்னடத்தை கொண்ட கைதிகளை திறந்தவெளி சிறைக்கு மாற்றுகின்றனர். இங்குள்ள கைதிகள் மனரீதியான முன்னேற்றம் அடைகின்றனர். அங்கு வேலைவாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன.
இதனால் அவர்கள் தண்டனை காலம் முடிவடைந்து வெளியில் வரும்போது நல்லதொரு எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள வாய்ப்பாக அமைகிறது. ஆனால் இந்த வசதி பெண் கைதிகளுக்கு இல்லை.
எனவே தமிழகத்தில் பெண் கைதிகளுக்கு திறந்தவெளி சிறை அமைக்க வேண்டும் என்று உள்துறை செயலாளர், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. ஆகியோருக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே பெண் கைதிகளுக்கு திறந்தவெளி சிறை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.