12 ஆண்டுகளுக்கு பிறகு பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது
12 ஆண்டுகளுக்கு பிறகு பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டி உள்ளது.
பவானிசாகர்,
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக பவானிசாகர் அணை உள்ளது. 120 அடி உயரம் கொண்ட இந்த அணையில் 15 அடி சேறும், சகதியும் போக 105 அடிக்கு தண்ணீர் சேமிக்க முடியும். இந்த அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மாவட்ட மலைகள் உள்ளன. அங்கு மழை பெய்யும்போது பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது. இந்த நிலையில் நீலகிரி மலைப்பகுதியில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டுப்பாளையத்தில் உள்ள பில்லூர் அணை அதன் முழுக்கொள்ளளவை எட்டிவிட்டது. இதைத்தொடர்ந்து நேற்று பில்லூர் அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.
உபரிநீர் திறந்துவிடப்பட்டதாலும், நீலகிரி மலைப்பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதாலும் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் தற்போது பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று மாலை 4 மணி அளவில் அணைக்கு வினாடிக்கு 29 ஆயிரத்து 913 கனஅடி தண்ணீர் வந்தது. அணையின் நீர்மட்டம் 100.09 அடியாக உயர்ந்து இருந்தது. மேலும் அணையில் இருந்து பவானி ஆற்றில் வினாடிக்கு 1,500 கனஅடி நீரும், கீழ்பவானி வாய்க்காலுக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடி நீரும் திறந்துவிடப்படுகிறது.
கடந்த 2006–ம் ஆண்டுதான் பவானிசாகர் அணை 100 அடியை எட்டியது. தற்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு 100 அடியை தாண்டி உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.