கொட்டும் மழையில் பயணிகளை அரசு பஸ்சில் இருந்து இறக்கி விட்ட டிரைவர், பள்ளி மாணவிகள் போராட்டம்


கொட்டும் மழையில் பயணிகளை அரசு பஸ்சில் இருந்து இறக்கி விட்ட டிரைவர், பள்ளி மாணவிகள் போராட்டம்
x
தினத்தந்தி 15 Aug 2018 4:30 AM IST (Updated: 15 Aug 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

பழுது ஏற்பட்டதாக கூறி அரசு பஸ்சில் இருந்து பயணிகளை டிரைவர் நடுவழியில் இறக்கி விட்டார். இதனால் பள்ளி மாணவிகள், பொதுமக்கள் கொட்டும் மழையில் போராட்டம் நடத்தினார்கள்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து நஞ்சநாடு, அணிக்கொரை, எப்பநாடு, தூனேரி, தலைகுந்தா, குருத்துக்குளி, கீழ்குந்தா, பிக்கட்டி, அதிகரட்டி, முட்டிநாடு உள்பட பல்வேறு கிராமங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

கிராமப்புறங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ–மாணவிகள், அரசு அலுவலகம் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உள்ளிட்டோர் அந்த பஸ்களில் ஊட்டிக்கு தினமும் வந்து செல்கிறார்கள். மேலும் பொதுமக்கள் தங்களது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று மாலை 5.30 மணியளவில் ஊட்டி ஏ.டி.சி.யில் முட்டிநாடு கிராமத்துக்கு செல்லும் அரசு பஸ் ஒன்று வந்தது. அந்த பஸ்சில் பள்ளி மாணவிகள், பொதுமக்கள் என பலர் ஏறினர்.

அந்த அரசு பஸ் ஊட்டி ஏ.டி.சி.யில் இருந்து எட்டின்ஸ் சாலை வழியாக சேரிங்கிராஸ் பகுதிக்கு செல்வதற்கு முன்பே, டிரைவர் பஸ்சில் பழுதடைந்து உள்ளது என்றும், வேறு பஸ்சில் செல்லுங்கள் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் கிராமங்களுக்கு செல்வதற்காக பஸ்சில் இருக்கைகளில் அமர்ந்து இருந்த பள்ளி மாணவிகள் உள்பட சக பயணிகளை நடுவழியில் கீழே இறக்கி விடப்பட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவிகள் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் ஒன்று திரண்டனர். பின்னர் அவர்கள் முட்டிநாடு கிராமத்துக்கு அரசு பஸ்களை முறையாக இயக்க வேண்டும், நடுவழியில் பழுதடையும் பஸ்களை முழுமையாக சரிபார்க்க வேண்டும் என்று கொட்டும் மழையில் குடைகளை பிடித்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஊட்டியில் பெய்த தொடர் மழையால் பள்ளி மாணவிகள் கடுங்குளிரில் நடுங்கியபடி போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

அதனை தொடர்ந்து அவர்கள் ஊட்டி அரசு போக்குவரத்துக் கழக அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளிடம் முறையாக பஸ்சை இயக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அங்கு பணியில் இருந்த அதிகாரிகள் முட்டிநாடு கிராமத்துக்கு செல்ல மாற்று பஸ் ஏற்பாடு செய்து தருவதாக கூறினர். அதன் காரணமாக பள்ளி மாணவிகள், பொதுமக்கள் ஊட்டி மத்திய பஸ் நிலையத்திலேயே பஸ்சுக்காக காத்திருந்து இரவு 8 மணி அளவில் வேறு பஸ்சில் சென்றனர்.

இதுகுறித்து முட்டிநாடு கிராம பொதுமக்கள் கூறும்போது, முட்டிநாடு கிராமத்துக்கு அரசு பஸ்கள் முறையாக இயக்கப்படுவது இல்லை. பள்ளி மாணவிகள் வீட்டிற்கு சென்றால் தங்களது பாடங்களை படிக்க முடியும். இப்படி பாதிவழியில் இறக்கி விடப்பட்டதால் நாங்கள் அவதி அடைந்து உள்ளோம். எனவே, பழுதடைந்த பஸ்களை சரிசெய்து முட்டிநாடு கிராமத்துக்கு முறையாக அரசு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


Next Story