பயணிகளுக்கு மேலும் ஒரு திகில் பயணம்: கூவம் ஆறுக்கு கீழே டிசம்பரில் மெட்ரோ ரெயில் இயக்கம் அடுத்த மாதம் சோதனை ஓட்டம்


பயணிகளுக்கு மேலும் ஒரு திகில் பயணம்: கூவம் ஆறுக்கு கீழே டிசம்பரில் மெட்ரோ ரெயில் இயக்கம் அடுத்த மாதம் சோதனை ஓட்டம்
x
தினத்தந்தி 15 Aug 2018 4:30 AM IST (Updated: 15 Aug 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு மேலும் ஒரு திகில் பயணமாக கூவம் ஆறுக்கு கீழே டிசம்பரில் மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது.

சென்னை, 

சென்னையில் மெட்ரோ ரெயில் சேவைக்காக வண்ணாரப்பேட்டை- விமான நிலையம் இடையே 23.1 கிலோமீட்டர் தொலைவில் முதல் வழித்தடத்திலும், சென்டிரல்- பரங்கிமலை இடையே 22 கிலோமீட்டர் தொலைவில் 2-வது வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில் பாதைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதில் முதல் வழித்தடத்தில் உள்ள ஏ.ஜி-டி.எம்.எஸ்.- சென்டிரல் இடையே 10 கிலோ மீட்டர் தூரம் கொண்ட பாதையை தவிர்த்து, மீதம் உள்ள அனைத்து பாதைகளிலும் மெட்ரோ ரெயில் சேவை நடந்து வருகிறது.

சென்டிரல்- வண்ணாரப்பேட்டை, சென்டிரல்- ஏ.ஜி-டி.எம்.எஸ். இடையிலான சுரங்க பாதையில் ரெயில் தண்டவாளம், சிக்னல் அமைக்கும் பணிகள் முற்றிலும் நிறைவடைந்து விட்டன. பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த பாதையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) சோதனை ஓட்டம் நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர்.

2 அடுக்குகள்

இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:-

ஏ.ஜி-டி.எம்.எஸ்.- சென்டிரல்- வண்ணாரப்பேட்டை இடையே 10 கிலோமீட்டர் தூரம் கொண்ட பாதையில் டிசம்பரில் போக்குவரத்தை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. சென்டிரல் ரெயில் நிலையத்தில் 2 அடுக்குகளில் ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

நேரு பூங்காவில் இருந்து முதல் அடுக்கில் ரெயில்கள் தற்போது வந்து கொண்டு இருக்கின்றன. வண்ணாரப்பேட்டை- ஏ.ஜி-டி.எம்.எஸ். இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கும் போது வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்டிரல் நோக்கி வரும் ரெயில்கள் கீழே அமைக்கப்பட்டுள்ள ரெயில் நிலையத்துக்கு வரும்.

டிசம்பரில் இயக்கம்

டீசல் என்ஜின் மூலம் அடுத்த மாதம் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளோம். பாதுகாப்பு ஆணையர் ஆய்வுக்கு பின்னர் டிசம்பரில் ஏ.ஜி-டி.எம்.எஸ்.- சென்டிரல் மற்றும் வண்ணாரப்பேட்டை இடையே ரெயில் போக்குவரத்து தொடங்க வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வது திகில் பயணமாக இருப்பதாக பயணிகள் கூறுகின்றனர்.

தற்போது பயணிகளுக்கு மேலும் ஒரு திகில் பயணமாக அண்ணா சாலையில் இருந்து அரசினர் தோட்டம் வழியாக சென்டிரல் வரும் மெட்ரோ ரெயில் கூவம் ஆறுக்கு கீழே சுமார் 100 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் டிசம்பர் மாதம் இயக்கப்பட உள்ளது.

மண் சோதனை

சென்னையில் போக்கு வரத்து நெரிசலை குறைக்க 2-வது கட்டமாக மாதவரம்- சிறுசேரி, மாதவரம்- சோழிங்கநல்லூர், நெற்குன்றம்- விவேகானந்தர் இல்லம் ஆகிய 3 வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்த திட்ட அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதல் விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே ஆரம்ப கட்டப்பணிகளாக மாதவரம்- சிறுசேரிக்கு இடையே அடையாறு, இந்திரா நகரில் 200 அடிக்கு ஒரு ஆழ்குழாய் வீதம் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு ஆங்காங்கே போர்வெல் கருவிகள் மூலம் 130 அடி வரை குழிகள் தோண்டி மண் எடுக் கப்பட்டு, சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Next Story