நாகர்கோவில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சந்தன மரம் வெட்டிக்கடத்தல் மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு


நாகர்கோவில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சந்தன மரம் வெட்டிக்கடத்தல் மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 15 Aug 2018 3:45 AM IST (Updated: 15 Aug 2018 2:06 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சந்தன மரத்தை வெட்டிக்கடத்திய மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பத்திர பதிவு அலுவலக வளாகத்தில் சந்தன மரம் உள்பட பல்வேறு மரங்கள் நடப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்று காலை அலுவலகத்துக்கு வந்த பணியாளர்கள் அலுவலகத்தின் முன்புற பகுதியில் நின்ற சந்தன மரம் வெட்டி கடத்தப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கும், போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு பத்திரப்பதிவு அலுவலகத்துக்குள் புகுந்த மர்ம ஆசாமி, அலுவலகத்தின் முன்புறமிருந்த சந்தன மரத்தை, மரம் அறுக்க பயன்படுத்தும் எந்திர வாளால் வெட்டி கடத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. சந்தன மரத்தை வெட்டிய ஆசாமி மரத்தின் அடிப்பகுதியை வாளால் அறுத்து எடுத்ததற்கான தடயங்கள் காணப்படுகிறது. அந்த மரத்தின் கிளைகளை அங்கேயே போட்டு விட்டு, மரத்துண்டுகளை எடுத்துச் சென்றுள்ளார்.

இதுபற்றிய தகவல் அறிந்த கோட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் பத்திர பதிவு அலுவலக வளாகத்துக்குள் நள்ளிரவில் நுழைந்து சந்தன மரத்தை வெட்டிக் கடத்தி சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்புவரை இதுபோல் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டு வந்தன. பின்னர் போலீசார், சந்தன மரத்தை வெட்டிக் கடத்தியதாக வெளி மாவட்ட நபர்களை பிடித்து ஜெயிலில் அடைத்தனர். அதன் பிறகு குற்ற சம்பவங்கள் குறைந்தன.

தற்போது மீண்டும் சந்தன மரம் வெட்டிக் கடத்தும் சம்பவம் தொடங்கியுள்ளது. எனவே இந்த சம்பவத்தில் ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்ட வெளி மாவட்ட நபர்களுக்கு தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Next Story