தனியார் நிறுவனம் நடத்தி ரூ.47¼ லட்சம் மோசடி
கொடைக்கானலில் தனியார் நிறுவனம் நடத்தி ரூ.47¼ லட்சம் மோசடி செய்ததாக தம்பதி மீது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டது.
திண்டுக்கல்,
கொடைக்கானல் தாலுகா பண்ணைக்காடு பகுதியை சேர்ந்த சிலர், நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள், தனியார் நிறுவனம் நடத்தி ஒரு தம்பதி மோசடி செய்தாக புகார் அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
கொடைக்கானலை சேர்ந்த தம்பதியினர் ஒரு கல்லூரி நடத்தினர். மேலும் அவர்கள், ஒரு தனியார் நிறுவனத்தை தொடங்கினர். அந்த அமைப்பு சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த நிறுவனத்தில் பண்ணைக்காடு பகுதியை சேர்ந்த 21 பேர் உறுப்பினர்களாக சேர்ந்தோம். இதற்காக ஒவ்வொரு நபரும் தலா ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் முதலீடு செய்தோம். அந்த வகையில் ரூ.47¼ லட்சம் முதலீடு செய்துள்ளோம். இந்த முதலீட்டுக்காக ஒவ்வொரு நபருக்கும் மாதந்தோறும் தலா ரூ.12 ஆயிரத்து 500 வீதம் பங்கு தொகை தருவதாக கூறினர். அதேபோல் தொடர்ந்து 4 மாதங்களாக பங்கு தொகையை கொடுத்தனர்.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக பங்கு தொகை தரவில்லை. அதுபற்றி கேட்ட போது பங்கு தொகையை தராமல் காலம் கடத்தி வந்தனர். மேலும் எங்களை மோசடி செய்யும் வகையில் செயல்படுகின்றனர். இதற்கிடையே அந்த தம்பதியினர் தலைமறைவாகி விட்டனர். தற்போது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. எனவே, போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து நாங்கள் முதலீடு செய்த பணத்தை மீட்டு தரவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story